கற்க கற்க-வேட்டையாடு விளையாடு

தமிழ்த் திரைப்படங்களில் நாயகன் அறிமுகம் வெகு சில வகைகளிலேயே  அமையப் பெற்று வந்துள்ளது. ஒன்று நாயகன் ஒரு ஏழைப் பங்காளனாக காட்டிக்கொள்ளும் வண்ணம் ஒரு பாடல் , இது பரவலாக எம் ஜி ஆர் , சிவாஜி திரைப்பட்டங்களில் கையாளப்பட்டது.பின்பு 80 களில் ,  திமிர் பிடித்த நாயகியை அடக்கும் விதமாக நாயகன் பாடும்படி , அல்லது காரில் கார்பரேட்டர் சூடாகி அதற்கு நீர் பிடிக்க வரும் நாயகி , நாயகன் சோகமாக பாடுவதைக் கேட்பதுபோல சிலகாலம் தொடர்ந்தது. பின்பு தனித்துவமான ஹீரோ அறிமுகப் பாடல் என்பது 80களின் பிற்பகுதியில் , ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்காக நல்ல ஜனரஞ்சகமான மெட்டுக்களுடனும் வண்ணமயமான உடைகள் நடன  அசைவுகள் மூலமாகவும் ,  பாடல் வரிகளில் நாயகனின் வீர தீர பராக்கிரம வள்ளல் குணநலன் பற்றி எடுத்துரைப்பதாகவும் அமைந்தன. என்னளவில் அதற்கான கச்சிதமான இலக்கணங்கள் ரஜினி நடிக்கும் படங்களில் மட்டுமே காணப்பட்டதாக உணர்கிறேன்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் ரஜினி தளபதி மூலம் வேறொரு தளத்திற்கு சென்றிருந்தாலும் , அதில் அவருக்கு அறிமுகப்பாடல் என்ற ஒன்று இல்லை. சண்டைக்காட்சி மூலமே அறிமுகமாவார். மன்னனிலும் அந்த விமான நிலையம் விஜய சாந்தி மோதல் காட்சி மூலமாகவே அறிமுகமாவார். பின்பு ரஜினிக்கென தனித்துவமான அறிமுக இசை , அண்ணாமலை படத்தில் தேவா இசையமைப்பில் ஜேம்ஸ் பாண்ட் ரக இசையோடு SUPERSTAR என்று எழுத்துக்கள் பறக்கும்போது அப்படியே நாடி நரம்பெல்லாம் ஜிவ்வென்று முறுக்கேறி தலைவா என்று கத்தி ஆர்ப்பரிக்கும் நிலைக்கு ரசிகர்களை இட்டுச் சென்றது.
ஆனால் சந்திரமுகிக்கு பின்னால் வந்த ரஜினியின் படங்களில் அந்த ட்ரேட் மார்க் இசை இல்லாதது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.அண்ணாமலையில் ரஜினிக்கு அறிமுகப்பாடலான வந்தேண்டா பால்காரன் , பாட்ஷாவில் ஆட்டோகாரன் , முத்துவில் ஒருவன் ஒருவன் முதலாளி இந்த மூன்று பாடல்களும் ரஜினியின் திரை அறிமுகப் பாடல்களில் முதலில் இடம் பெறுபவை.
மாறாக ரஜினியின் சமகாலப் போட்டியாளராக இன்றளவும் நீடிக்கும் கமலுக்கு ஏனோ அறிமுகப் பாடல் என்பது அத்தனை மாஸ் தனமான பாடல்களாக இல்லை என்பது என் எண்ணம். வெகு அபூர்வமாக விருமாண்டியில் கொம்புல பூவ சுத்தி , விஸ்வரூபத்தில் எவனென்று நினைத்தாய் ( இது அறிமுகப் பாடல் இல்லை எனினும் வீர தீர குணநல பறைசாற்றுதல் என்னும் வகையில் கணக்கில் கொள்ளலாம் ) என மூளையைக் கசக்கினால் சில பாடல்கள் தேறும். Who’s the hero  மன்மதன் அம்புவும் ஒரு நல்ல பாடல்.
Vettayadu Vilayadu
இந்த சில படங்களுக்கு நடுவில் அந்தக் குறையை ஓரளவுக்கேனும் நீக்கியது கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு. ஹாரிஸ் ஜெயராஜ் படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்த நாட்கள் அவை. முத்து முத்தான பாடல்கள் , பார்த்த முதல் நாளே என்னும் ஒரு தோத்திரப் பாடல் தழுவல் உட்பட.இதிலும் கற்க கற்க என்னும் அந்த சிறப்புமிக்க பாடல் கமலுக்கு அறிமுகப் பாடல் இல்லை எனினும் விஸ்வரூபம் ரீதியில் இவரு ஒரு நாயக வழிபாட்டுப் பாடல்.பாடல் துவங்கும்போழுதே ஆர்ப்பரிக்கும் இசை  இது ஒரு அதிரடிப்பாடல் என்பதைக் கூறுகிறது , பின்பு வரும் ஆங்கில வரிகள் Raghavan, Stay in the process  Top Dollar, Lil Curry Fizz, Akhenaton, Ready come on , yeah , lets go ..
பின்பு ஒலிக்கும் கிடார் , ட்ரம்ஸ்,  ஆழமான பாஸ் தொகுப்பு என அட்டகாசமான நாயக வழிபாட்டுப் பாடலாக இதனை கொண்டுவந்திருப்பார் ஹாரிஸ். கிளாசிகல் கிடார் வல்லுனரான ஹாரிஸ் , இளையராஜாவிற்குப் பிறகு தனித்துவமான நடையில் பாடல்களில் கிடார் இசையைக் கோர்ப்பதில் வல்லவர். மின்னலேயில் துவங்கி கவுதம் மேனன் படங்களில் இவரது இசையானது மற்ற இயக்குனர்களின் படங்களில் இடம் பெற்ற பாடல்களை விட அழகாக அபாரமாக இருக்கும். இதற்கு இயக்குனரின் தனிப்பட்ட ரசனை ஒரு முக்கிய காரணம். கௌதம் மேனன் எப்போதுமே தான் ஒரு வெறித்தனமான இளையராஜா ரசிகன் என்று கூறியிருக்கிறார். இளையராஜாவின் இசையில் , குறிப்பாக கிடாரில் மயங்கியே ஹாரிஸிடம் இனிய கிடார் மெட்டுக்களை இசையமைக்க சொல்லியிருக்கிறார்.
முன்பு எதோ ஒரு பத்திரிகையில் வேட்டையாடு விளையாடு குறித்து ஒரு பேட்டியில் கௌதம் இவ்வாறு கூறினார் , தான் ஒரு வெறித்தனமான கமல் ரசிகன் என்றும் , ஒரு ரசிகன் தன்  அபிமான நாயகனை எப்படியெல்லாம் திரையில் காண வேண்டும் என்று நினைப்பானோ அப்படி கற்பனை செய்து அதற்கு வடிவம் கொடுத்துதான் படத்தில் முதல் பத்து நிமிடங்களை காட்சிப்படுத்தினேன் , முதல் பத்து நிமிடங்கள் நான் படத்தின் இயக்குனராக இல்லாமல் கமலின் ரசிகனாக மட்டுமே இருந்தேன் என்றும் கூறியிருந்தார். (செய்தி துல்லியமாக இல்லாமலிருக்கலாம் ஆனால் அதன் மையக் கருத்து இதுதான்) .
அதற்கேற்ற வகையில் காட்சிகளையும் அமைத்திருப்பார். ப்டத்துவக்கத்திலேயே ராகவனின் கண் வேணும், கொண்டு வர்றவனுக்கு 5 லட்சம் தரேன் , ஸ்பாட் பேமன்ட் .. அடுத்த நொடி கேட்டை எட்டி உதைத்துவிட்டு கமல் கம்பீரமாக நடந்து வருகிறார்.
52373777593209823698-1
நீல ஜீன்ஸ் , கருப்பு சட்டை , ஆளவந்தானின் ஸ்டீராய்டுகளால் சற்றே பொத  பொதவென்ற உடல் , 50 வயதுகளின்  தொடக்கத்தில்  கண் ரப்பைகள் லேசாக தொங்கினாலும், செதுக்கிய மீசை சற்றே தொங்க விட்ட உல்லாச பறவைகள காலத்து ஸ்டைல் என போலீசின் மிடுக்கோடு அட்டகாசமான நடை , கூடவே பின்னணி இசையைக் கேட்க வேண்டுமே ,பிளிரும் ட்ரம்பெட் பின்பு ட்ரம்பெட்டிலேயே கற்க கற்க கள்ளம் கற்க என்னும் இசை , பின்பு ராயபுரம் மணியிடம் பேசும் கமலின் மெட்ராஸ் தமிழ் வழக்கு, உச்ச கட்டமாக ஒத்தா கதவ மூடுடா என்னும் கர்ஜனை என ராகவனை இதற்குமேல் அட்டகாசமாக வெளிப்படுத்த கமலைத் தவிர யாராலும் முடியாது. அடுத்து வரும் சண்டைக்  காட்சியும் வெட்டுக்களற்ற நீளமான காட்சியாக படமாக்கியிருப்பார்.
சண்டை முடிவில் இந்தப் பாடல் துவங்குகிறது, படத்தில் துவக்கத்தில் சொல்வது போல “Another  Episode  in Police officer’s life” . (முதல் எபிசோட் காக்க காக்க) கமலின் அன்றாட நிகழ்வுகள் காட்சித் தொகுப்புகளாக காண்பிக்கப் படுகின்றன, சின்னச் சின்ன டிவி திரை பெரிதாவது போன்று  zoom in & zoom out  முறையில் ஒவ்வொரு நிகழ்வும் திரையில் பெரிதாகிறது. காக்கிச் சட்டையில் கமல் சில அதிகாரிகளுடன் நடக்கிறார், டிரம்களின் அதிர்விற்கேற்ப கட் செய்யப்பட்டு இணைக்கப்பட்ட கோட் ஸ்யூட் அணிந்து கமல் நடக்கும் காட்சிகள் அற்புதம், குறிப்பாக அந்த உடையில் ரே பான் ஏவியேட்டர் கண்ணாடி அணிந்து கமல் துப்பாக்கியை நீட்டி சுடும்போது , வெற்றி விழா காலத்து , 80 களின் இறுதியில் இருந்த தோற்றத்தில் மின்னிச் செல்கிறார்.
தான் கெட்டவர்களுக்குத்தான் சிம்ம சொப்பனம், மற்றபடி எனக்கு இயல்பாக இருக்கவும் தெரியும் என்பதைக் காண்பிக்க சக போலீசாரிடம் சிரிக்கும் காட்சி , பின்பு தான் உடனடியாக நியாயத்தை வழங்குபவன் என்னும் ரீதியில் பாதிக்கப் பட்ட பெண் முன் தீயவர்களை சுட்டு வீழ்த்தும் காட்சி என இன்னும் சில பல தேய் வழக்கு காட்சிகளால் பாடல் நிறைகிறது. என்றாலும் அதனை சுவாரஸ்யமாக காண்பித்த இயக்குனரையும் ஒட்டு மொத்த பாடலையும் நம்மால் வெறுமனே புறந்தள்ள முடியாது.
இந்தப் பாடல் இன்னும் சில வகைகளில் One of its Kind ஆக விளங்குகிறது. தாமரையின் சிறப்பான பாடல் வரிகள் , தமிழ்ப்பகுதி மட்டும். தாமரை ஒரு பெண் கவிஞர் , பெண்களின் நுண்ணிய உணர்வுகளை தூது வருமா  காக்க காக்க பாடலில் அழகாக எழுதியிருப்பார் , நான் இதுவரையில் கேட்டிராத வகையில் அதன் வரிகள் இருந்தன , கருப்பிலே உடைகள் அணிந்தேன், இருட்டிலே காத்துக் கிடந்தேன் , யட்சன் போல நீயும் வந்தாய் , சரசங்கள் செய்த படியே சவுக்கடி  கொடுக்கும் யுவனே , வலித்தாலும் சுகம் தந்து சென்றாய் ,.. பின்னாட்களில் உயிரியல் கல்வி தொடர்பான சில அயல்நாட்டு  படங்களைப் பார்த்தபோது (ஹி ஹி .. அதேதான்) சவுக்கால் அடிப்பது  பற்றி அறிந்துகொண்டேன்.அடுத்த வரிகளில் Feng Shui என்னும் சீன வாஸ்து தொடர்பாக எழுதியிருப்பார். சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திட்டும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே ,.. இது ஏதோ காதல் பாடல் அல்ல , இது ஒரு மது விடுதியில் போதையில் ஆடும் பெண்ணின் பாடல். ஆனால் அப்படி ஒரு சூழலில் இதுபோன்ற பாடல்வரிகளை எழுதிய தாமரையின் மாத்தியோசி யுக்தி என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அப்படிப்பட்ட பெண்மை மிளிரும் தாமரையின் எழுத்துக்கள் ஒரு ஆணின் புஜபல பராக்கிரமத்தை எப்படிக் கூறும் ? தன்  சாவைச் சட்டைப் பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான், மாவீரமும் ஒரு நேர்மையும் கை கொத்துக் கொள்ள , அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் கொள்ள , அதிகாரமோ ஆர்ப்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை முன் ஆய்வதில் பின் பாய்வதில் இவன் புலியின் பிள்ளை  , பொதுவில் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்வது ஆண் பெண் காதலுக்கு உருவகமாக சொல்லப் பட்டது, ஆனால் அதையே இங்கு வீரத்திற்கு உதாரணமாக சொல்கிறார்.  ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே. வைரமுத்து அளவுக்கு மொழியாளுமை இல்லை என்றாலும் தாமரையின் எழுத்துக்களில்  உள்ள எளிமையே அவரது சிறப்பம்சம் என்பேன்.
அப்படியே அப்பாடலில் உள்ள ராப் இசைக்கு வருவோம். தமிழில் ராப்பை சொல்லிசை என்கிறார்கள், அதாவது சொற்களால் ஆன  இசை. யோகி பி யின் மடை திறந்து ( இளையராஜாவின் நிழல்கள் ) ரீமிக்ஸ் ஒரே பாடலில் அவர்களை வெளிச்சத்திற்கும் உச்சத்திற்கும் கொண்டுவந்தது. தொடர்ந்து GV பிரகாஷின் இசையில் பொல்லாதவன் ஆடுகளம் என யோகி பி கலக்கினார் .தமிழில் ராப்பின் தொடக்கம் எப்போது நிகழ்ந்தது ? பாடல்களுக்கு நடுவே வெறும் ஆங்கில வசனங்களை உச்சரிப்பது ராப் ஆகுமா ?நான் அறிந்தவரையில் முதன் முதலில் ராப்பின் ஒரு குழந்தை வடிவை பாடலில் வடித்தது இளையராஜா. அஞ்சலி படத்தில் மொட்ட மாடி மொட்ட மாடி பாடலில் குழந்தை யுவனை சில ஆங்கில வரிகள் பாட வைத்திருப்பார்.
Stop don’t move..When I say some thing you listen to that ,when I show some thing you look at that ..
now stop the game , don’t discuss it..
இதுதான் ராஜாவின் அதிகபட்ச ராப் இசை. பொதுவாக மரபான இசை மற்றும் தெம்மாங்கில் வல்லவரான ராஜா Deep Bass ஐ தரும் குறைந்த ஸ்தாயி கொண்ட கிடார் தந்திகளையோ  குப் குப் என்று நெஞ்சை அதிரவைக்கும் டிரம்களையோ, Heavy Metal Rock Guitar வகைகளையோ அதிகம் பயன்படுத்துபவர் இல்லை, அது உடலுக்கு உகந்ததல்ல என்று கூறுவார் குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் , பெண்கள் , கர்ப்பிணிகள் போன்றோர் அதனால் இதய பாதிப்பிற்கு உள்ளாவர் என்று கூறுவார். ராஜாவிடமும் பாஸ் இருக்கும் , பாடல்களில் வரிகளைத தொடர்ந்து பாஸ் கூடவே வரும். இசைக் குறியீடுகள் எழுதும் போதே ராஜா  Bass Follow through விற்கான குறியீடுகளையும் சேர்த்தே எழுதிவிடுவாராம். ஏனைய இசையமைப்பாளர்கள் பொதுவாக Bass follow through வை பாஸ் கிடாரிஸ்டிடமே விட்டு விடுவார்களாம். அனால் ராஜா அதனையும் தன விருப்பத்திற்கேற்றவாறு அமைப்பாராம். அப்படிப்பட்ட மரபிசை விரும்பியான ராஜாவின் ஒரு பரிசோதனை முயற்சியே அஞ்சலியில் அந்த ராப். பின்பு தமிழில் சுரேஷ் பீட்டர் குரலில்  காதலனில் பேட்ட ராப் மூலம் ரஹ்மான் ராப்பை முயற்சித்திருப்பார். பின்பு காதல் தேசத்தில்  பசியை மறந்தோம் பெண்ணை கண்டு பாடலில்
 yo kalloori saalai hotter than a summer day bus stop,tea shop,in the middle of the non stop
cutie beauty and as sweet as candy am mad,am bad am a romeo baby
i love you lady you judge my mind
i am a never goin with the girl you are beautiful jasmine
daisy, roja, sunshine forget me not – girl I am so crazy
என்று ரஹ்மானே பாடியிருக்கிறார் (என்று நினைக்கிறேன்).
அதன் பின்னர் அவ்வளவாக ராப் என்ற ஒன்று தமிழில் வராமல் இருந்தது, யுவன் பிரேம்ஜி காலம் வரும் வரை. பின்பு ரஹ்மானும் blazee மூலம் சில ராப்களை வழங்கினார், பாய்ஸ் , பாபா , செம்மொழியான தமிழ் மொழியாம் என்று சிற்சில முயற்சிகள்.இவர்கள் பெரும்பாலும் ஆங்கில வரிகளுக்கு இந்திய பாடகர்களை யே பயன்படுத்தினர். அதனால் அசலான ராப்பின் துல்லியம் இல்லாமலாயிற்று , இந்தியர்கள் ஆங்கிலம்  உச்சரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள் போன்றவை ராப்பை பாடல்களில் முக்கியத்துவம் இல்லாத பகுதியாக மாற்றின.இங்கேதான் ஹாரிஸ் மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து மாறுபட்டு , அமெரிக்க ராப் இசைக் கலைஞர்களை பாடல் வரிகளுக்கும் குரலுக்கும் பயன்படுத்தினார். அமெரிக்க கறுப்பின மக்களின் இசையான ராப் அதன் அசலான வடிவத்தில் கச்சிதமாக கற்க கற்க பாடலில் பொருந்தியது.
இந்தப் பாடலின் முழுமையான rap வரிகளைக் காண்போம்
You speed and you get pulled over And the breath analyzer test provides proof that you ain’t sober Good Cop!
Stop the beat, it could be my daughter crossing the street, If your brand new Buick Skylark, a work of art
 and its not sitting in the last place you parked Good Cop!
Run the place, I’ma see the little thief right after the court gate Look, a lot of us see police’s force
I ain’t tryin to knock ur hussy, due to each his own And u get voilated and the beef is on
And u living with ur mom’s and u see they aint grown You gonna see my song, read my poem
And know that top dollar n scurry lilz  cannot be that wrong
Screw you manhood tops Few good cops!”
கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன் Gotta love ur job
கள்ளம் படித்த கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன் Stand  up  now
சுற்றும் சுற்றும் காற்றைப்போலே எங்கும் செல்வான் இவன் aha  ooh ahan
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்
Who’s the man on the land that can stand now Who’s the man on the land that can stand down
Who’s the man on the land that can stand now (Who’s the man on the land that can stand down)
Who’s the man on the land that can stand now Who’s the man on the land that can stand down
Who’s the man on the land that can stand now (Who’s the man on the land that can stand down……echo fade out)
இந்த ராப் வரிகளின் முழு அர்த்தம் எனக்கு இன்னும் புரியவில்லை. இணையத்தில் படித்த கட்டுரைகள் மூலம்  ஒருவாறாக இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன் .அதாவது பொதுவில் சமூகத்திற்கு காவல் துறை மேல் ஒரு ஆழமான நம்பிக்கையின்மை அல்லது உள்ளூர ஒரு வெறுப்பு இருக்கிறது. நாமே கூட போலீசை மாமா என்று தரக்குறைவாக சமயங்களில் விளிக்கிறோம். அப்படிப்பட்ட போலீசிடமே ஒரு பிரச்சனை என்றால் சென்று முறையிடுகிறோம். இந்த முரண்பாட்டைத்தான் ராப் வரிகளில் வடித்துள்ளதாக நினைக்கிறேன்.
குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை ஓரம் கட்ட சொல்லி , அவர்கள் தெளிவாக இல்லை என்று உணர்ந்து அவர்களைத் தடுத்தால் நல்ல காவலன்.
அதிரும் இசையை ஒலிக்க விட்டு சாலையில் கவனம் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களை எச்சரிப்பவன் நல்ல காவலன்.
புத்தம் புதிய ப்யூக் கார், ஒரு கலை வடிவம் போன்ற கார் , நிறுத்திச் சென்ற இடத்தில் இல்லாமல் போனால் அப்போது போலீசிடம்தான்  முறையிட வேண்டும் ,
மற்ற வரிகள் குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை.இதைப் பாடியவர்கள் தேவன் , திப்பு , நகுல் மற்று ஆண்ட்ரியா -தமிழ்ப் பகுதி
Top Dollar, Lil Curry Fizz, Akhenaton என்னும் ராப்பிசைக் கலைஞர்கள், ஆங்கிலப் பகுதி – பாடல்களும் வரிகளும்.
இந்தப் பாடலில் குறைகள் ஏதும் இல்லையா என்றால் ஒரு சில குறைகள் கண்டிப்பாக உள்ளன , முதலில் இந்த பாடலுக்கான டெம்ப்ளேட் , பாடலின் இறுதியில் காட்சியமைப்பு காக்க காக்க தூது வருமா பாடலின் இறுதிக் காட்சிகளை ஒத்துள்ளது. ஒரு ஆணின் வீரத்தை பறைசாற்றும் பாடலில் நகுலின் பெண்மை மிளிரும் குரல் ஒரு துருத்தல் போல உள்ளது.
இதன்   பின்பு ஹாரிஸ் இசையமைத்த நாயகன் அறிமுகப் பாடல்கள் எதுவுமே அத்தனை பிரபலம் இல்லை, பீமாவில் ஒரு முகமோ இரு முகமோ , சத்யம் படத்தில் விஷாலுக்கு ஆறடி காத்தே என்னும் ஒரு பாடல் , சூர்யாவிற்கு ஆதவன்,அயன் என்று இசையமைத்திருந்தாலும் கற்க கற்க பாடலை இனி அவராலேயே கூட மிஞ்ச முடியாது என்பது என் எண்ணம். அப்படி அவர் மிஞ்சாமல் இருப்பதே இந்த பாடலுக்கு அவர் செய்யும் மரியாதை என்று எண்ணுகிறேன்.
இந்த பாடல் குறித்து அறிந்து கொள்ள இணையத்தில் சில உரையாடல்கள் , சிறிய பதிவுகளின் பின்னூட்டப் பெட்டிகளில் இருந்து நிறைய தகவல்கள் என சிறிது சிறிதாக தகவல் சேர்த்தேன். அவர்களுக்கு நன்றிகள் பல .
Advertisements
Posted in Music | Tagged , , , , | 6 Comments

ஜெயமோகன் & ஜேம்ஸ் கேமரூன் , பனிமனிதனும் அவதாரும்

சிலமாதங்களுக்கு முன்பு வாங்கிய ஜெயமோகனின் பனிமனிதன் குழந்தைகளுக்கான நெடுங்கதை படித்தேன். முன்னுரையிலேயே குறிப்பிட்டு விடுகிறார், இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல பெரியவர்களுக்கானதும்தான் என்று.சின்னச் சின்ன வாக்கியங்களில் முழு நாவலும் கூடவே பற்பல அறிவியல் தகவல்களும்
நாவல் இமயமலை லடாக் பகுதிகளில் காணப்படும் மிகப்பெரிய காலடித்தடங்கள் குறித்த இராணுவத்தினரின் ஆய்வு பற்றியது.மேஜர் பாண்டியன் என்பவன் அக்காலடித்தடங்கள் குறித்து ஆராயப் போகிறான்.கூடவே பௌத்த மதம் குறித்த விஷயங்களும் வருகின்றன. வாழும் புத்தரைத்தேர்வு செய்வதற்காகன தேடலும் இடம்பெறுகிறது.யதி என்னும் பனி மனிதனைத் தேடும் ஒரு சாகசப் பயணம் தான் நாவல். மேலும் படிக்க ஆசையாக இருந்தால் udumalai.com இல் வாங்கிப் படிக்கவும்.
அதுவரை சாதாரணமாகப் படித்துக் கொண்டிருந்த நான் பனிமனிதனை அவர்கள் சந்திக்க ஆரம்பித்த இடத்தில் பனிமனிதர்கள் வாழும் இடம் பற்றிய வர்ணனைகளில் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். பல இடங்கள் எனக்கு அவதார் திரைப் படத்தை நினைவுபடுத்தின.நாவல் எழுதப் பட்டது 1999 ஆம் ஆண்டு.அவதார் ஜேம்ஸ் கேமரூனால்  14 ஆண்டுகளாக மெருகேற்றப் பட்டது என படித்துள்ளேன். கண்டிப்பாக ஜெயமோகனும் ஜேம்ஸ் கேமரூனும்   சந்தித்திருக்கும் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது மிகுந்த வியப்புக்குரிய ஒன்றுதான்.
சில உதாரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் படித்துவிட்டு நீங்களே கூறுங்கள்.
31 ஆம் அத்தியாயத்தில் வரும் வரிகள்

// அங்கு நின்ற ஒவ்வொரு மரமும் மிகப் பெரியவையாக இருந்தன.நமது ஊரில் உள்ள ஒரு மிகப் பெரிய மரத்தின் அடிமரம் அளவுக்கு அந்த மரங்களின் கிளைகள் காணப்பட்டன.//

bigtree

 // ஒரு இடத்தில் ஏராளமான நாய்கள் மரங்கள் மீது துள்ளித்துள்ளி விளையாடின.அவற்றுக்கு ஆடுகள் போல கொம்புகள் இருந்தன.அவற்றின் கால்களும் குரங்குக் கால்கள் மாதிரி இருந்தன // 

 dog
 எவ்வளவு கூர்மையான விவரிப்பு. கூடவே படத்தில் நாய்களின் கால்களைப் பாருங்கள்.எப்படி இருவரும் இது பற்றி யோசித்தனர் என்று வியப்பு மேலோங்குகிறது.

அத்தியாயம் 35 // மிகப்பெரிய நீல நிற மின்மினிகள் கூட்டம் கூட்டமாக எழுந்து பறந்தன.ஒவ்வொரு மின்மினியும் ஒரு ஜீரோ வாட் பல்ப் அளவுக்கு இருந்தது.//

1355207455_A-scene-from-James-Camerons-Avatar
 இவற்றிலும் பெரிய ஆச்சரியத்தைப் பாருங்கள்

அத்தியாயம் 34

//ஒவ்வொரு பனி மனிதனாக வந்து மேற்குத்திசை நோக்கி அமரத் தொடங்கினார்கள்.சற்று நேரத்தில் அங்கு ஏராளமான பனி மனிதர்கள் கூடி விட்டார்கள்.“எப்படியும் இவை மூவாயிரத்துக்கு குறையாது” என்றார் டாக்டர்.பனிமனிதர்கள் மறையும் சூரியனைப் பார்த்தபடி அமர்ந்தார்கள்.அவர்களுடைய முகமெல்லாம் சிவப்பாக அந்தியின் ஒளி பரவியது .மிக மெதுவாக அவர்கள் பாட ஆரம்பித்தார்கள்.அது பாட்டு இல்லை வெறும் ரீங்காரம் மட்டும் தான்.ஆனால் அத்தனை பேரும்சேர்ந்து ஒரே குரலாக அதை எழுப்பினார்கள்.ஒரு குரல் கூட விலகவே இல்லை.//

avatar_ritual1
 அவதாரில் நாவிகளின் வாழ்க்கைக்கும் இயற்கைக்குமான நுண்ணிய பிணைப்பு, தங்கள் தெய்வம் ஏவாவிடம் வேண்டும்போது உட்கார்ந்து ஒத்த மனதுடன் வேண்டுதல் என பல நிகழ்வுகள் பனிமனிதன் கதையிலும் வந்துள்ளது.
என்னுள் எழுந்த வியப்பு இன்னும் அடங்கவே இல்லை. கிட்டத்தட்ட மனிதனால் எடுக்கப்படக்கூடிய சினிமாவின் எண்ணமுடியாத சாத்தியங்களைக் கடந்த படைப்பு அவதார் என்று சிலாகிக்கப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன்னரே படைக்கப்பட்ட படைப்பான பனிமனிதனில் இடம்பெற்ற வர்ணனைகள்  2009 இல் வந்த அவதாரில் காணப்பட்டது  தற்செயல் நிகழ்வுதான் என்று நினைக்கிறேன் .
Posted in General | Tagged , , , | 9 Comments

Death proof (2007)

க்வென்டின் டரன்டினோ , ஹாலிவுட்டின் தனித்துவமான இயக்குனர். அதிரடி சண்டைக் காட்சிகளும் , அநாயசமான கணினி வரைகலைக் காட்சிகளும் , உணர்ச்சி ததும்பும் படுக்கை அறை காதல் காட்சிகளும் அதிகம் முக்கியத்துவம் பெறும் ஹாலிவுட் திரைப்படங்களில் தன தனித்துவமான வசனங்கள் மூலம் நம்மை ஈர்க்கும் ஒரு இயக்குனர்.
DPQT
தனது முதல் படமான ரிசர்வாயர் டாக்ஸ் இல் இருந்து ஜாங்கோ அன்செயின்ட் வரை தனக்கென ஒரு தனித்துவமான யுக்தியை கடைப்பிடித்து வருபவர். நான் லீனியர் எனப்படும் நேரற்ற முன்னும் பின்னுமான கதை சொல்லல் முறை மூலம் திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்தவர். அந்த வகையில் அவருடைய மாஸ்டர் பீஸ் என்னைப் பொருத்தவரை பல்ப் பிக்ஷன் தான். டெத் ப்ரூப் ஒரு நான் லீனியர் வகை திரைப்படமல்ல. வெகு சாதாரணமான ஒரு B  grade வகையிலான திரைப்படம். திரைப்பட வகைகளில் road  movie என்னும் ஒரு genre உண்டு.  பெரும்பாலும் பயணமும் பயணம் சார்ந்த அனுபவங்களும் படங்களில் இடம்பெற்றிருக்கும். இந்தியாவில் நான் பார்த்ததில் அந்த்ரா மாலி விவேக் ஓபராய் மனோஜ் பாஜ்பாய் நடித்த ராம்கோபால் வர்மா இயக்கத்தில் 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் வந்த Road என்னும் படம் road   movie  என்னும் வகையில் சேர்க்கலாம். தமிழில் பழைய படங்கள் திருமலை தென்குமரி , மெட்ராஸ் டு பாண்டிசேரி , மிஸ்கினின் நந்தலாலா கூட ஒரு வகையில் road movie வகைதான். வெகு சமீபத்தில் லிங்குசாமியின் பையா . ஒரு நல்ல ரோடு மூவியாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் அல்ப நாயக வழிபாட்டிற்காக காட்சிகள் அமைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டது.
டரன்டினோவின் சிறப்பம்சம் வன்முறையில் அழகுணர்ச்சி . அவரது எல்லா படங்களிலும் வன்முறை மிக அழகாக காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக ரத்தம் தெறிக்கும் காட்சிகள் . ஒரு துப்பாக்கித் தோட்டா மனித உடலைத் துளைக்கும்போது அந்த ரத்தப் புகை pink  mist கூட துல்லியமாக வெளிப்படும் அளவுக்கு நேர்த்தியாக இருக்கும். ஜாங்கோ அன்செயின்ட் இல் இதனை தெளிவாகக் காணலாம். ரிசர்வாயர் டாக்ஸ்சில் கூட இசையை ஒலிக்க விட்டு போலீசின் காதை அறுக்கும் கொள்ளையர்களில், ஒருவன் நடனமாடியபடியே ரசித்து அறுப்பான். பல்ப் பிக்ஷனில் ஜான்  டிரவோல்டாவும் சாமுவேல் ஜாக்சனும் அவர்கள் காரில் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஒருவனை தவறுதலாக சுட்டுக் கொன்றுவிட பின்பு காரை சுத்தம் செய்யும் காட்சிகளில் வன்முறையோடு கூடிய நகைச்சுவையும் இருக்கும்.
movies death proof 1024x768 wallpaper_www.wallfox_net_53
டரண்டினொ இந்தப் படத்தை இயக்கியதற்கு காரணம் அவர் மறந்துபோன ஒரு தலைமுறையின் ரசனையை மீளாக்கம் செய்ய விரும்பினார். ஆனால் அதனை ஒரு குறிப்பிட்ட காலத்தில் , அதாவது கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களாகக் காட்டாமல் நிகழ காலத்தில் நடப்பவையாகவே எடுத்திருந்தார். இத்தனைக்கும் ஹாலிவுட்டில் பீரியட் படம் எடுப்பது இந்தியா போன்று அத்தனை கடினமான விஷயம் இல்லை. விசாலமான நவீன சாலைகள் தவிர்த்து பழைய கட்டடங்களும் , பழமை மாறாத பல இடங்களும் அங்கே அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. டாரண்டினோ எப்போதும் பால்ய நினைவுகளை அதிகம் மீட்டெடுப்பவராகவே அறியப்படுகிறார். அவரது படங்களில் ஒலிக்கும் இசைக் குறிப்புகள் பாடல்கள் பெரும்பாலும் அவர் தனது இளம்பருவத்தில் அதிகம் ரசித்தவையாக இருக்கும். இங்கே சசிகுமார் தனது படங்களில் இளையராஜா பாடல்களை பின்னணியில் சேர்ப்பதுபோல. ஹாலிவுட்டில் அவர் டைரக்டர்ஸ் டிஜெ என்றே செல்லமாக அறியப்படுகிறார்.
அமெரிக்காவில் 1960-1980 என்பது ஒரு பொற்காலம். புதுப்புது வீட்டு உபயோகப் பொருட்களும் muscle car களும் அமெரிக்க அகண்ட சாலைகளும் மற்ற எந்த நாட்டு மக்களையும் விட அமெரிக்கர்களை மகிழ்ச்சியில் இருத்திய காலகட்டம் அது. குறிப்பாக கார்கள் , கார்கள் குதிரையின் வடிவமாக சாலைகளில் கட்டற்று பறக்கும் மிருகங்களாக கொண்டாடப் பட்டன. கார்களும் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடும் தனியே எழுத வேண்டிய விஷயம். ford , daimler chrysler மற்றும் general motors என்னும் மும்மூர்த்திகள் பொதுப்போக்குவரத்தின் பயன்பாட்டை கட்டுப்படுத்தி கார்கள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தி வளைகுடா நாடுகளின் எழுச்சிக்கு வித்திட்டன என்பதும் பிரமிப்பிற்குரிய ஒன்று.
musclecar
Muscle Car என்றால் என்ன என்று வெகு சுருக்கமாக பார்ப்போம்.மசில் கார் என்பது இரண்டு கதவுகள் கொண்ட மைலேஜ் என்பது பற்று கவலைப்படாத வேகம் ஒன்றே குறிக்கோள் என்னும் முரட்டுக் கார்கள். Supernaturals  என்னும் அமெரிக்கத்தொடரில் நாயகனும் அவன் தம்பியும் ஒரு செவர்லே இம்பாலாவில் அமெரிக்க கண்டம் முழுதும் பயணித்து பேய்களை வேட்டையாடுவார்கள். நாயகனுக்கு அந்த காரை தவிர்த்து  கொரியன் , ஜப்பானிய  ஐரோப்பிய கார்கள் வெறும் பிளாஸ்டிக் டப்பாக்கள் மட்டுமே. இன்றும் ஹிஸ்டரி சேனலில் Counting  cars நிகழ்ச்சியில் ஒரு மசில் காருக்கு இருக்கும் மதிப்பு பற்றி கூறுவார்கள்.70 களில் Dodge charger, Ford Mustang, chevy Impala, chevy Nova   போன்றவை பிரபலமான மசில் கார்கள்.நம்மூரில் இன்று எத்தனையோ விதவிதமான மோட்டார் பைக்குகள் வந்தாலும் இன்னும் யமஹா RX 100 க்கு இருக்கும் மவுசு தனிதான். அதுபோலத்தான் அமெரிக்கர்களுக்கு  மசில்  கார்களும்.
படத்தின் கதை என்ன ? அப்படி ஒன்று இந்தப் படத்தில் கிடையவே கிடையாது. சில பெண்கள் ஒரு பாரில் கூடி மது அருந்திவிட்டு பொழுதைக் கழிக்கிறார்கள் .அப்போது அவர்கள் காதலர்கள் அங்கு வந்து அவர்களுடன் செல்வதற்குவார இறுதியைக் கழிப்பதற்கு  முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறார்கள் . இவற்றையெல்லாம் இரண்டு கண்கள் கொலைவெறியுடன் கவனித்துக் கொண்ருக்கின்றன.பின்பு அந்த பெண்கள் தங்கள் காரில் சென்று  கொண்டிருக்கும்போது அந்த வில்லன் எதிரில் வந்து மோதி அவர்களைக் கொல்கிறான். அந்த கோர விபத்தில் அவன் மட்டும் தப்பிக்கிறான். ஏனென்றால் அவனது கார் Death Proof. திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும் வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் அது. பின்பு நடைபெறும் போலீஸ் விசாரணையில் அந்தப் பெண்கள் மது குடித்திருப்பதும் வில்லன் மது அருந்தாமலிருந்ததும் தெரியவந்து வில்லன் குற்றமற்றவன் என்று விடுவிக்கப்படுகிறான்.
வில்லன் பாத்திரம் ஏற்றிருந்தவர் Kurt Russel. முகத்தில் ஒரு வெட்டுக்காயத்தோடு 80 களின் சிகை அலங்காரத்தில் ஒரு கால எந்திரத்தில் இருந்து தவறி விழுந்தவர் போல காட்சியளிக்கிறார்.அவர் ஏன் அந்த பெண்களை கொலை செய்ய வேண்டும்? கர்ட் அடிப்படையில் ஒரு Pervert.கொலை செய்வது என்பது அவருக்கு ஒரு அட்ரினலின் சுரக்கச் செய்யும் ஒரு sex thing. அவ்வளவுதான்.
327404
குறிப்பாக கர்ட் தனது காரை அந்த பெண்களின் காருடன் நேருக்கு நேர் மோதும்போது ஒருத்தியின் கால் துண்டாகத் தெறித்து விழுகிறது. ஒருத்தியின் முகத்தில் கரட்டின் காரின் சக்கரம் சுழன்று தேய்க்கிறது. ஒருத்தி எகிறி வெளியே விழுந்து இறக்கிறாள். ஒவ்வொரு சாவும் தெளிவாக காட்டப் பட்டிருக்கும். இவ்வாறு ரத்தம் தெறிக்கும் gory காட்சிகளை காண்பிப்பதில் அலாதி இன்பம் இயக்குனருக்கு. விபத்து விசாரணையின் போது , கர்ட்  (படத்தில் ஸ்டன்ட் மேன் மைக்) தான் வேண்டுமென்றே மோதி அந்தப் பெண்களை கொலை செய்திருப்பான் என்று அந்த ஷெரீப் ஒரு தியரி சொல்கிறார். அப்போது ஷெரீப்பின் உதவியாளன் , சரி இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் எனும்போது ‘
sheriffs assistant :So what are you gonna do Pop?
sheriff: Well l can take it upon myself to work the case you know in my off hours.Search for evidence you know to prove my theory.Alert authorities. Dog that rotten son of a bitch.Wherever he goes l go. Or l can spend the same goddamn amount of time and energy following the NASCAR circuit.
sheriffs assistant: Hmm. I thought about it a lot.
sheriffs :I think l’d have a hell of lot happier life if l did the latter.
இதில் NASCAR என்பது கிரிக்கெட்டில் நம்மூர் IPL போல அமெரிக்காவின் கார் ரேஸ் போட்டி. ஷெரிப் கூட கார் ரேஸ் பிரியர் என்னும் காரணத்தால் குற்றவாளி பற்றி கவலை இன்றி போய்த் தொலை என்று விட்டுவிடுகிறார்.
டரண்டினொவின் வசனங்களில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் வித்தியாசமாகவே இருக்கும் , guess + estimate என்பதை guesstimate என்று கூறியிருப்பார். நான் முதன்முறை இவ்வார்த்தையை கேள்விப்படுகிறேன். அதுபோல himself என்பதை hisself என்பார். இதுபோன்ற informal ஆங்கில வார்த்தைகள் அதிகம் அவரது வசனங்களில் இடம்பெறும்.
மீண்டும் 14 மாதங்கள் கழித்து வேறொரு காரை தயார் செய்து இம்முறை வேறு சில பெண்களை பின்தொடருகிறான். இம்முறை  அந்தப் பெண்கள் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நாயகிக்கு பதிலாக நடிக்கும் பெண்கள். லெபனான் ,டென்னசி மாகாணத்தில் ஒரு டாட்ஜ் சார்ஜர் கார் 1970 மாடல் விற்பனைக்கு இருப்பது பற்றி கேள்விப்பட்டு  டெஸ்ட் ரைட் செல்கின்றனர். அப்போது ஒருத்தி காரின் கதவுகளில் பெல்ட்டை மாட்டிக்கொண்டு காரின் வெளியே முன்புறம் அமர்ந்துகொண்டு சாகசம் செய்கிறாள். அப்போது கர்ட் தனது காரை கொண்டு அந்த பெண்களின் காரில் மோதி பயமுறுத்துகிறார். ஓரிடத்தில் ஒரு புதருக்குள் அந்த பெண் விழுகிறாள். காரில் இருந்து இறங்கி ஒருத்தி கர்ட்டை  அவர் கையில் சுடுகிறாள். அங்கிருந்து கர்ட்  தப்பி செல்கிறார். ஆனால் அந்த பெண்கள் அவரை பின்தொடர்ந்து சென்று மோதி, அடித்துக் கொல்வதுடன் படம் முடிகிறது.
Untitled
இந்தப் படம் 70 களில் வெளிவந்த படங்களின் spoof ஓ என்று கூட சிலசமயம் நினைக்கத் தோன்றுகிறது.   படத்திற்கு ஒரு பழைய கால தோற்றத்தை அளிக்க ஒரு ஈஸ்ட்மேன் கலர் டோன் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நம்மூர் மழை விழுந்த பிரிண்ட் போல காட்சியளிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றப் பட்டிருக்கிறது. அதோடு நில்லாமல் சரியான கவனம் இன்றி Edit செய்யப்பட்டது போன்று தோற்றமளிக்க Jump  cut கள் செய்யப்பட்டுள்ளன. திடீரென்று ஒரு Frame  மட்டும் சிக்னல் இல்லாத TV யில் வரும் உடைத்த உளுந்து போன்ற பிம்பம் வருகிறது. பழைய எம்ஜியார் படங்களில் வரும் வில்லனின்  வெறித்த பார்வை க்ளோஸ் அப் , MSV இசையமைத்த படங்களில் வில்லனைக் காட்டும்போது வரும் இசை, துரத்தல் காட்சிகளில் அதிரும் டிரம் என பல விஷயங்களும் அந்த retro look ஐத் தர பிரத்யேகமாக இப்படத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. முடிந்தவரையில் கணினி வரைகலை இல்லாமல் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் முதலில் வரும் கார் மோதல் படு தத்ரூபம்.
தான் உருவாக்கியதிலேயே மோசமான படம் என்று டரண்டினொ இதனை குறிப்பிடுகிறார். இந்த படம் வெளியான போது வரவேற்பில்லாமல் தோல்வி அடைந்தது ஆனால் கடந்த 7 வருடங்களில் இதற்கென ஒரு Cult Followers உருவாகி வந்துள்ளதாக கட்டுரைகள் தெரிவிக்கின்றன. சில தசாப்தங்களுக்கு முன் அழிந்துவிட்ட ஒரு  Genre திரைப்படத்தை இந்த கால ரசிகர்களுக்கு அறியப்படுத்த  எடுத்த முயற்சி எனும் வகையில் இந்த படத்தைப் பார்க்கலாம்.
Posted in English Films | Tagged , , | Leave a comment

Kung fu Panda (2008)

அனிமேட்டட் படங்கள்  பொதுவாக என்னை  அவ்வளவாக கவர்ந்ததில்லை. Fantasy வகை திரைப்படங்கள், ஏலியன் பூமியை அழிப்பது போன்ற பிரம்மாண்டங்கள் , காட்சில்லா, ஜுராசிக் பார்க் போன்ற படங்களை எல்லாம் வசனம் புரியாமல் காட்சிகள் மூலமே கதையை குத்து மதிப்பாக புரிந்துகொள்கிற வயதில்  விரும்பி பார்த்தேன். பின்பு சப்டைட்டில் உதவியுடன் வசனங்கள் புரிய ஆரம்பித்த போது பிரம்மாண்டம் தவிர்த்த படங்களை அதிகம் பார்க்க ஆரம்பித்தேன். அனிமேஷன் படங்கள் என்றால் சற்று தள்ளியே செல்வது என்வழக்கம். இத்தனைக்கும் தூர்தர்ஷனில் கார்டூன் படங்கள் அதிகம் ஒளிபரப்ப மாட்டார்களா என்று ஏங்கிய காலங்கள் உண்டு. தொண்ணூறுகளில்   செவ்வாய் கிழமை மாலை 4.30 க்கு வொண்டெர் பலூனில் ஒரு கால் மணிநேரம், ஞாயிற்றுக் கிழமை ரங்கோலிக்கு முன் ஒரு அரை மணிநேரம் , அப்புறம் ஜங்கிள்  புக், டேல்ஸ் பின் , டக் டேல்ஸ் என்று மொத்தமே வாரத்திற்கு  3 மணிநேரங்கள் மட்டும் கார்டூன் படங்கள் காணக்  கிடைத்தன. தற்போது  கார்டூன் நெட்வொர்க் , நிக் அது  இதுவென 24 மணி நேரமும் கார்டூன்  கிடைத்தாலும் காத்திருந்து கண்ட நாட்களின் சுகம் கிட்டாது. சரி ப்ளாஷ் பேக்கிலிருந்து மீள்வோம்.
2009 ஆண்டு முதன் முதலில் Wall E என்னும் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் என்னமோ அனிமேஷன் என்றாலும் அதன் கதை திரைக்கதை ,எந்த ஒரு அனிமேஷன் அல்லாத படத்துக்கும் சற்றும் குறைந்ததல்ல என்று தோன்றியது. குறிப்பாக ரோபோக்கள் செய்யும் சேட்டைகள் , அவற்றின் மன ஓட்டத்தைப் எதிரொளிக்கும் முகம் என்று தூள் கிளப்பியிருந்தார்கள். பின்பு அட அனிமேஷன் படம்தானே என்று அவற்றை அலட்சியமாக ஒதுக்க என் மனம் இடம் தரவில்லை.  Finding Nemo , Antz , Rio, என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறவிடாமல் பார்த்தேன். அப்படி ஒருநாள் sony pix இல் பார்த்த படம்தான் குங்க்பு பாண்டா.
kung-fu-panda
முதல் முறை பார்த்த போது பாண்டாவின் நகைச்சுவை காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவையாக இருந்தன. பின்பு ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் அதனுள் இருக்கும் மிகச்சிறந்த தத்துவங்கள் , தரிசனங்கள் புலப்பட ஆரம்பித்தன.
சிலப்பதிகாரம் சொல்லும் மூன்று உண்மைகள் போல , குங்க்பு பாண்டாவிலும் மூன்று முக்கிய தத்துவங்கள் உள்ளன
1. There are no accidents. நிகழ்வதில் விபத்து என்று எதுவும் கிடையாது. முன்னர் தீர்மானிக்கப் பட்டதே நடக்கின்றன
2. You just need to believe. உன்னை நீ நம்பு ! எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் .
3. There is no secret ingredient. அதாவது ரகசிய இடுபொருள் என்று எதுவும் கிடையாது. சுவை என்பது நம் மனம் நினைப்பதே.
கண்டிப்பாக இந்த உண்மைகள் கீதையிலோ அல்லது எதோ உபநிஷதங்களிலோ காணக்கூடும்.கீழைத் தேசங்களான இந்தியா சீனா ஜப்பான் போன்றவற்றிற்கு பொதுவான தத்துவங்கள் இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக சீனாவின் மேல் இந்தியா பண்பாடு ரீதியான மேலாதிக்கம் கொண்டிருந்தது. கடந்த 300 ஆண்டுகளில் மெக்காலே கல்வி மூலம் மாபெரும் பண்பாட்டின் கூறுகளை மறந்து அலட்சியப்படுத்தி இன்று ஒரு ரெண்டும்கெட்டான் நிலையில் நிற்கிறோம்.
இந்த திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்காக கதைச்சுருக்கம்.
அமைதிப்பள்ளத்தாக்கு என்னும் ஊரில் மாஸ்டர் ஷிபு (ஒரு சிகப்பு பாண்டா கரடி), தன குரு ஊக்வே (ஆமை) மற்றும் தன் சீடர்கள் புலி, குரங்கு,கொக்கு, பாம்பு மற்றும் கும்பிடும் வெட்டுக்கிளியுடன் (ஆகரோஷ ஐவர்) மடாலயத்தில் வாழ்ந்து வருகிறது. ஷிபுவின் வளர்ப்புப் பிள்ளையான தாய் லங் என்னும் சிறுத்தை அக்கிரமம் செய்ததால் ஊக்வே அதனை சிறைப்படுத்தி விடுகிறது.
ஒருநாள் ஊக்வே , ஷிபுவிடம் தாய் லங் சிறையிலிருந்து  தப்பித்து விட்டுவதாகக் தனக்கு தோன்றியது என்கிறது. தாய் லங்கை தற்போது யாராலும் வெல்ல முடியாது. டிராகன் போராளி மட்டுமே வெல்ல முடியும். எனவே இப்போது டிராகன் போராளியைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது என்று முடிவு செய்கின்றன.  டிராகன் போராளியைத் தேர்ந்தெடுக்கும் நாள் வருகிறது. அந்த நிகழ்ச்சியைக் காண ஊரே திரண்டு மலையிலிருக்கும் மடாலயத்தில் ஒன்று கூடுகின்றது.
அந்த ஊரில் ஒரு நூடுல்ஸ் மற்றும் டம்ப்ளிங் எனப்படும் மோமோ விற்கும் உணவகத்தை ஒரு வாத்து நடத்தி வருகின்றது. வாத்தின் வளர்ப்பு மகன்தான் போ என்னும் பாண்டா கரடி. போ ஒரு தீவிர குங்க்பு ரசிகன். ஆக்ரோஷ ஐவரின் விசிறி. குங்க்பு கலையில் சிறந்து விளங்க வேண்டும் என்று கனவு காண்பவன். போ வின் அறிமுகக்காட்சி அதகளமாக இருக்கும். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டது . தீனி மாடன். தன்னை வளர்த்து வரும் வாத்தின் உணவகத்தில் உதவி செய்கிறது.
டிராகன் போராளியைக் காணும் ஆசையில் போவும் புறப்படுகிறது. அப்போது வாத்து , ஊரே மடாலயத்தில் இருக்கிறது, அங்கே சென்றால் நிறைய உணவை விற்கலாம் என்று போவிடம் உணவு வண்டியை கொடுத்து விடுகிறது.
போ வின் மிகப்பெரும் எதிரி படிக்கட்டுகள். மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க , தனது வண்டியுடன் போ மேலேறி வருவதற்குள் மடாலயத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. உள்ளே ஆக்ரோஷ ஐவர் தத்தமது வித்தைகளை ஊக்வேயிற்கு காட்டிக்கொண்டிருக்கின்றனர். போ என்னென்னவோ முயற்சிகள் செய்து உள்ளே நடப்பனவற்றைக் காண முயல்கிறது. கடைசியாக ஒரு நாற்காலியில் ராக்கெட் வெடிகளை கட்டிக் கொண்டு பற்றவைத்து பறந்து வந்து மைதானத்தினுள் விழுகிறது. சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ராக்கெட் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அந்த நேரம் பார்த்து ஊக்வே தனது விரலை போ வை நோக்கி நீட்டி போ தான் டிராகன் போராளி என்கிறது
PoOogwayDW
ஷிபுவும், ஆக்ரோஷ ஐவரும் மிகுந்த அதிர்சிக்குள்ளகின்றனர். அனைவருமே புலிதான் அடுத்த டிராகன் போராளி என்று நினைத்துக் கொண்டிருந்தனர். உடனே ஷிபு ஊக்வேயிடம் , நீங்கள் தவறுதலாக போவை சுட்டிக்காட்டி விட்டீர்கள். இது ஒரு விபத்து என்று வாதிடுகிறது. அதற்கு ஊக்வே நிகழ்வதில் விபத்து என்று எதுவும் கிடையாது. முன்னர் தீர்மானிக்கப் பட்டதே நடக்கின்றன என்கிறது . முதல் தத்துவம் 🙂
ஷிபுவிற்கு போ வை எப்படியாவது விரட்டிவிட வேண்டும். முதல் நாள் பயிற்சியின் போது ஷிபு போவிடம் உனக்கு குங்க்பு வில் எவ்வளவு தெரியும் ? ஏதாவது ஒரு நிலையில் துவங்கலாம். நீ சொல் எந்த நிலையில் துவங்கலாம் என கேட்கிறது . போ அதற்கு பூச்சியம் என்னும் நிலையிலிருந்து துவங்கலாம் என்கிறது. ஷிபு , பூச்சியம் என்று ஒரு நிலை கிடையாது என்று கூறிவிட்டு அங்கிருக்கும் கருவிகளுடன் போவை மோதவிடுகிறது. குண்டக்க மண்டக்க அடிபடும் போவை பார்த்து ம்ம்ம் இப்போது பூச்சியம் என்று ஒரு நிலை உள்ளது என்று ஏளனம் செய்கிறது.ஆக்ரோஷ ஐவர் கூட்டணியும் போவை ஏளனப்படுத்துகின்றது.
மனம்வருந்தும் போ தனியாக ஒரு மரத்தின் அடியில் நின்று பழங்களை தின்றுகொண்டிக்கிறது. அப்போது ஊக்வே அங்கே வருகிறது. நீ ஏன் கவலையோடு இருக்கிறாய் என்று கேட்கும் ஊக்வேயிடம் , ஷிபு என்னைக் கண்டாலே வெறுக்கிறார். ஐவரும் வெறுக்கிறார்கள் பேசாமல் நான் கிராமத்திற்கு போய் நூடுல்ஸ் செய்யப் போகிறேன் என்று புலம்புகிறது. அதற்கு ஊக்வே நீ நேற்று நடந்ததையும் நாளை நடக்கப்போவதையும் நினைத்து வருந்தாதே. நேற்று என்பது முடிந்து போன விஷயம் , நாளை என்பது நாம் அறியாயது , இன்று என்பதே நிகழ்காலம் அதுதான் முக்கியம் என்று கூறிவிட்டு செல்கிறது. ஆங்கிலத்தில் இந்த வசனங்கள் மிக அருமையாக இருக்கும் , தமிழ் மொழி பெயர்ப்பில் அதன் உண்மையான அர்த்தத்தை என்னால் கொண்டுவர முடியவில்லை.
Po: Maybe I should just quit and go back to making noodles.
Oogway: Quit, don’t quit? Noodles, don’t noodles? You are too concerned about what was and what will be. There is a saying: yesterday is history, tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the “present.”
போ விற்கு எதோ ஒன்று புரிந்த மாதிரி இருக்கின்றது. மறுநாள் தெளிவுடன் பயிற்சிக்கு செல்கிறது. எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறது . என்ன செய்தாலும் உண்மையான வீரன் ஒருபோதும் பாதியில் விட்டுவிட்டு ஓடி விடமாட்டான் என்று உறுதியுடன் கூறி நிற்கிறது.
இம்முறை கவலை ரேகைகள் ஷிபுவின் முகத்தில். போ ஒரு பாண்டா , குங்க்பு கற்றுக்கொள்ள சிரமப்படுகிறது. எப்படி போ வை ஒரு குங்க்பு வீரனாக்குவது என்று குழம்புகிறது. இந்நிலையில் தாய் லங் தப்பிவிட்ட செய்தி வந்தடைகிறது. கவலையுடன் ஷிபு ஊக்வேயை நோக்கி ஓடுகிறது.
ஷிபு :மாஸ்டர் மாஸ்டர் ஒரு கெட்ட செய்தி.
ஊக்வே :ஷிபு செய்தி என்ற ஒன்றுதான் உண்டு , அதில் நல்லது கெட்டது என்று                       எதுவும் கிடையாது.
ஷிபு :  மாஸ்டர் தாய் லங் தப்பி விட்டது
ஊக்வே : ஹ்ம்ம் இது நிச்சயமாக கெட்ட செய்திதான் ,
இதில் இருக்கும் மெல்லிய நசைச்சுவையை நாம் கவனிக்க வேண்டும்.
ஊக்வே தொடர்கிறது , டிராகன் போராளி தாய் லங்கை தடுத்து நிறுத்துவான் என்று நீ நம்பாதவரை இது கெட்ட செய்திதான்,
ஷிபு : என்னால் எப்படி முடியும்? எனக்கு உங்கள் உதவி தேவை.
ஊக்வே: இல்லை ஷிபு , நீ உன்னை  நம்ப வேண்டும் , போ விற்கு உன்னால் பயிற்சி அளிக்க முடியும் என்று நம்ப வேண்டும்
என்று ஊக்வே ஷிபுவிடம் கூறிவிட்டு காற்றில்  கலந்து விடுகிறது.
No, you just need to believe. Promise me, Shifu, promise me you will believe.
இது இரண்டாவது தத்துவம் 🙂
தளர்ந்த மனதுடன் மடாலயத்திற்கு வரும் ஷிபு சமயல் அறையில் போ நொறுக்குத் தீனி தேடி அனாயசமாக உயரங்களில் ஏறுவதையும் , அதன் உடல் ஒத்துழைப்பதையும் கண்டு , உணவின் மூலமே இதற்கு பயிற்சி அளிக்க முடியும் என்று முடிவுக்கு வருகிறது.பின்பு அவ்வாறே பயிற்சி அளித்து போவை குங்க்பு வில் தேர்ச்சி பெற வைக்கிறது. பின்பு சிறந்த சக்தியை டிராகன் போராளிக்கு அளிக்கும் டிராகன் சுருள் ஒன்றை போ விற்கு அளிக்கிறது.ஆனால் அது வெறும் ஒரு பிரதிபலிக்கும் சுருள் . அதில் ஒன்றுமே எழுதப்பட்டிருக்க வில்லை. போவும் ஷிபுவும் ஏமாற்றமடைகின்றன.
Kung-Fu-Panda-Wallpaper-Dekstop-12633-Wallpaper
இதற்கிடையில் ஷிபுவின் ஐந்து சீடர்களும் தாய் லங்கை தடுத்து நிறுத்த செல்கின்றன . ஆனால் தாய் லங் அவர்களைத் தாக்கி திருப்பி அனுப்பி விடுகிறது. போ பயந்துவிடுகிறது. குங்க்பு கலையில் சிறந்து விளங்கும் ஐவராலேயே முடியவில்லை நாம் எப்படி தாய் லங்கை நிறுத்தப் போகிறோம் என்று பயந்து டிராகன் சுருளை எடுத்துக்கொண்டு ஊருக்குள் தந்தையிடம் செல்கிறது.ஷிபு முடிந்த வரையில் தாய் லங்கை தடுப்போம் என்று மடாலயத்தில் தங்கி விடுகிறது. ஊருக்குள் அனுப்பி ஊரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல கூறுகிறது.
ஊருக்குள் வரும் போ தன் தந்தை வாத்திடம் செல்கிறது. வாத்தும் தனது பொருட்களுடன் ஊரை விட்டு செல்ல தயாராகிக்கொண்டு இருக்கிறது. போவைப் பார்க்கும் வாத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. பின்பு இருவரும் உடைமைகளை தூக்கிக் கொண்டு நடக்கின்றன. அப்போது வருத்தத்துடன் காணப்படும் போவிடம் , நான் ஒரு உண்மையை உனக்கு சொல்லவா ?
நான் செய்யும் சூப்பில் ,நான் சேர்க்கும் ரகசிய இடுபொருள் தான் அதன் சுவைக்கு காரணம் என்று பலமுறை உன்னிடம் கூறியிருந்தேனே , உண்மையில் ரகசிய இடுபொருள் என்று ஒன்று கிடையாது , அது சிறந்த சூப் என்று உன்மனம் நம்பினால் போதும். அதுவே அதை சிறந்தது ஆக்கும் என்று கூறுகிறது.
There is no secret ingriedient – தத்துவம் மூன்று 🙂
போ உடனே தன்னுடைய டிராகன் சுருளை விரித்து பார்க்கிறது. தன் முகம் அதில் தெரிகிறது. உண்மையான டிராகன் போராளிக்கு சக்தி அளிக்க மந்திரம் எதுவும் தேவை இல்லை. தான் மனதார நம்பினால் மட்டும் போதும் என்கிற உண்மை புரிகிறது. உடனே சிபுவைப் பார்க்க விரைகிறது.பின்பு தாய் லங்கை தோற்கடித்து அமைதிப் பள்ளத்தாக்கை காக்கிறது. சுபம். நீண்ட கதைச் சுருக்கம் இங்கு முடிகிறது.
Dream work நிறுவனத்தாரின் இப்படைப்பு 2003 இல் தொடங்கி 2008 இல் முடிந்தது. நான்கு வருடங்கள். எதிலும் துல்லியம் அதி துல்லியம் ஒன்றே குறிக்கோள். முதலில் இதனை ஒரு பகடி வகையிலான படம் போல எடுக்க நினைத்தனர். பின்பு முடிவை மாற்றிக் கொண்டு ஒரு தீவிர குங்க்பு படமாக எடுத்தனர். இதற்காக குங்க்பு அசைவுகளை உண்மையாகக் கொண்டுவர அனிமேட்டர்கள் குங்க்பு பயிற்சியும் மேற்கொண்டனர். சீனக் கலாசாரம் பற்றியும் குங்க்பு கலை பற்றியும் தீவிர ஆராய்ச்சி செய்து முடிந்த வரையில் நேர்மையாக திரையில் கொண்டு வந்தனர்.
இதற்கு வேலை செய்த ஒலிப் பொறியாளர்களின் பணி மிகக் கடினமாக  இருந்தது. போ வின் வயிறு குலுங்கும் போது ஏற்படும் சத்தம் முதல் தாய் லங் இறுதிக் காட்சியில் தன் வாலை தானே கடிக்கும் போது ஒலிக்கும் ம்யூன்க் என்னும் ஒலி வரை ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து ஏற்படுத்தினர். மேலும் இந்தப் படம் சீன ஆக்ஷன் காமடி வகையான குங்க்பு ஹசில் முதல் க்ரவுச்சிங் டைகர் ஹிட்டன் டிராகன் வரை பல படங்களால் கவரப்பட்டு சண்டைக்காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும்.
முதலில் பாத்திரத் தேர்வு போ ஒரு பாண்டா கரடி . அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு இனம் , ஷிபு ஒரு செம்பாண்டா இதுவும் அழிவில் இருக்கும் ஒரு இனம் ,டைக்ரஸ் ஒரு தென் சீனப் புலி, ஊக்வே ஒரு ஆமை, குரங்கு ஒரு தங்க நிற நீல முகக் குரங்கு, வெட்டுக்கிளி ஒரு சீன மாண்டிஸ். தாய் லங் ஒரு பனிச் சிறுத்தை.
இவற்றிக்கு குரல் கொடுத்ததும் பெரிய பெரிய நடிகர்கள். இது பற்றி மேலதிக தகவல்கள் விக்கியில் நிறையக் கிடைக்கின்றன.
இத்திரைப்படம் சீனாவில் வெளியான போது சீனர்களே மிரண்டு விட்டார்களாம். எப்படி ஒரு அமெரிக்க நிறுவனம் நமது பண்பாட்டை ஒட்டி இப்படி ஒரு சிறந்த படைப்பை வழங்க முடிந்திருக்கிறது என்று. அப்படியென்றால் எத்தகைய உழைப்பைச் செலுத்தியிருப்பார்கள் ?
KUNG FU PANDA 5
போவின் தந்தை வாத்து ஒரு முள்ளங்கியை வெட்டும்போது முள்ளங்கியில் தெரியும் கிழங்கின் குறுக்குவெட்டுத் தோற்றம் கூட கவனத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார்கள்.
இறுதிக்காட்சியில் போ தாய் லாங்கின் விரல்களைப் பிடித்துக் கொண்டு ஊக்சி விரல் பிடி என்னும் முறையில் தன் சுண்டு விரலால் “ஸ்கிடூஷ்”என்று கூறியபடி அழுத்தி தாய் லங்கை அழிக்கும். டெர்மினேடரில் அர்னால்ட் அஸ்டல விஸ்டா பேபி என்பாரே அதுபோல. இதுபோல சின்னச் சின்ன புரியாத வார்த்தைகளை போ படத்தின் துவக்கத்திலும் கூறும்.
skadoosh+_1d45a173b2a9bb241557eaafbcc0742c
இப்படத்தின் தலைமை அனிமேட்டர் தன் குழுவிடம் இவ்வாறு சொல்கிறார் . நாமெல்லாம் இதற்கு முன் எத்தனையோ குப்பை படங்களில் வேலை செய்திருப்போம். எப்போதாவது அபூர்வமாகத்தான் ஒரு ரத்தினம் போன்ற படம் கிடைக்கும். குங்க்பு பாண்டா ஒரு ரத்தினம். எனவே நாம் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்கிறார். கண்டிப்பாக இது குழந்தைகளுக்கான படம் கிடையாது. பெரியவர்களுக்கான படமும் கூட. நம் வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களை நகைச்சுவையாக கூறி நம் மனதில் இடம்பிடிக்கும் இப்படம் கண்டிப்பாக தவறவே விடக்கூடாத திரைப்படம்.
Posted in English Films | Tagged , , , , | Leave a comment

Into the Wild (2007)

  • CHRIS    : I’m thinking about going to Alaska.
  • WAYNE : Alaska, Alaska? Or city Alaska? The city Alaska does have markets.
  • CHRIS   : No, Alaska, Alaska. I want to be all the way out there. On my own. No map.                       No watch. No axe.Just out there. Big mountains, rivers, sky. Game. Just be                       out there  in it. In the wild.
ஷான் பென் Sean Penn, ஹாலிவுட்டில் பரீட்சார்த்த முயற்சிகள் செய்யும் ஒரு நடிகர் / இயக்குனர். Tree of Life , Mystic river போன்றவை அவரது குறிப்பிட்டத்தக்க படங்கள் . இவரைப் பற்றி நான் முதல் முதல் அறிந்தது I am Sam தெய்வத் திருமகள் காப்பி பிரச்சனையின் மூலமாகத்தான். அவரது திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 2007 வெளிவந்த படமே இது . Jon Krakauer என்பவரது நாவலை மூலக்கதையாகக் கொண்டு திரைக்கதை எழுதினார் ஷான் பென். ஜான் அந்த நாவலை க்றிஸ் மெக்காண்டல்ஸ் என்னும் இளைஞனின் கடிதங்கள் மற்றும் டைரிக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதினார்.
sean-penn
முதல் பத்தியில் பார்த்த வசனத்திற்கு வருவோம்.
அலாஸ்கா போக விரும்பும் க்ரிஸ்ஸின் விருப்பத்தைக் கேட்டவுடன் திகைக்கும் வெய்ன் , நீ அலாஸ்கா அலாஸ்காவிற்கு போகவிரும்புகிறாயா அல்லதுநகர அலாஸ்காவிற்கு போகவிரும்புகிறாயா, நகர அலாஸ்காவில் கடைகள் இருக்கும் என்கிறான் .
க்றிஸ் அதற்கு , நான் அலாஸ்கா அலாஸ்காவிற்கு போக விரும்புகிறேன் , வரைபடம் வேண்டாம் , கடிகாரம் வேண்டாம் , கோடாலி வேண்டாம், அங்கே போகமட்டும் வேண்டும், பெரிய மலைகள், நதிகள், வானம்… அங்கே இருந்தால் மட்டும் போதும் என்கிறான்.
Chris McCandless என்னும் கல்லூரி முடித்த ஒரு அறிவுகூர்மையுள்ள இளைஞனின் அமெரிக்க நடைபயணம் அல்லது பயணம் தான் நேரற்ற திரைக்கதை உத்தி மூலம் படத்தில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ் ஏன் அலாஸ்கா செல்ல விரும்புகிறான் , ஏன் உலக வாழ்க்கையை வெறுக்கிறான் என், அலாஸ்கா செல்லும் வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், அவனுக்கு உதவுபவர்கள்,பயண அனுபவங்கள் , இடையிடையே சகோதரிக்கு அனுப்பும் கடிதங்கள் என சம்பவங்கள் முன்னும் பின்னுமாக தொகுக்கப் பட்டிருக்கும்.
into_the_wild_by_e_pa
சில படங்கள் மயிர்க்கூச்செறியச் செய்யும் பல காட்சிகளால் தொகுக்கப் பட்டிருக்கும். அவை அந்த நேரத்தில் காண நன்றாக இருக்கும் என்றாலும் படம் பார்த்து வெளியே வந்தவுடன் விரைவில் நாம் மறந்தும் போவோம். Mission Impossible, Terminator , Jurassic park போன்ற பிரம்மாண்ட படங்கள் அந்த வகை. (அவதாரும் அந்தவகையிலான பிரம்மாண்டம் என்றாலும் படத்தின் மைய இழை அல்லது பேசுபொருள் மனிதனின் பேராசை என்பதால் மற்றவை போலன்றி தனித்து தெரியும். அதுபற்றி பிறிதோர் பதிவில் காணலாம்.) அது போல அல்லாமல் சில நாட்களேனும் நம் நினைவை விட்டு அகலாமல் நம்மை அந்த காட்சி வெளியில் அலைய வைக்கும் உணர்வைத்தரும் படங்கள் சிலவே. ஒருமாதியான மென்னுணர் படங்கள் (Subtle Movies) எனலாம். கசக்கிப் பிழியும் சோகம் என்றில்லாமல் இதயத்தை வெகுவாகக் கனக்க வைக்காமல் ஒரு மென்சோகம் அளிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும்.
படம் முழுவதுமே இசையும் , காட்சிப் பிம்பங்களும் ஒத்திசைந்த ஒரு அழகியல் அனுபவம். கிடாரின் மெல்லிய இசையும் , பனிசூழ் அலாஸ்காவின் வனவுயிர்களின் வியப்பிலாழ்த்தும் காட்சிகளும் , ஒட்டுமொத்த அமெரிக்க நிலத்தின் பிரம்மாண்ட நிலவெளிக் காட்சிகளும் பைரனின் கவிதை வரிகளுமாக இழைத்து இழைத்து செதுக்கியிருப்பார் ஷான் பென். இவற்றையெல்லாம் ரசிக்க ஒரு பிரத்தியேகமான மனநிலை வேண்டும்.
குறிப்பாக ஒரு காட்சியில் க்றிஸ் பனிவெளியில் சில மிளாவை ஒத்த மான்கள் (Moose) ஓடுவதைக் காண்பான். ஒருகணம் மிகுந்த மனவெழுச்சியில் கண்கள் பனிக்க அவற்றை பார்த்துக் கொண்டே இருப்பான். மலைச்சாலைகளில் பைக் பயணங்களில் வெகு அபூர்வமாக சில தருணங்கள் எனக்கும் அதுபோல் வாய்த்ததுண்டு. ஒருமுறை வேட்டைக்காக துப்பாக்கியை எடுத்து ஒரு மானைக் குறிபார்க்கும் அவன் , பின்னாலிருந்து ஒரு மான் குட்டி தொடர்வதைக் கண்டு அதனை கொல்லாமல் விட்டுவிடுவான்.இயற்கை என்னும் மாவல்லமை நம்முடைய கண்களின் சுவர்களை நனைய வைக்கும் இயல்புடையது.
371059
அதுபோல ஒருமுறை கொலராடோ நதியில் படகு செலுத்த விரும்பி kayaking அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அலுவலகம் செல்வான். அங்கிருக்கும் அதிகாரி படகு செலுத்தவேண்டுமானால் 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் , இல்லாவிடில் 2000 டாலர்கள் செலுத்தினால் சில படகுக் குழுக்களில் சிலநேரங்களில் கடைசி நிமிட ரத்து செய்யும் நபர்களுக்குப் பதில் நீ இடம்பெறலாம் என்பான்.இயற்கையை கட்டுப்படுத்த இவர்கள் யார் என்று அதனை புறந்தள்ளி சட்டவிரோதமாக நதியில் படகு செலுத்துவான். அதனை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் , அங்கே வரும் பின்னணி இசை கிடாரின் இனிமை இரண்டும் சேர்ந்து ஒரு கனவுநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும். என் கணினியின் பின்னணிப் படமும் இதுதான்.
Into-the-Wild-into-the-wild-15555849-1280-960
இவ்வாறு தன்னுடைய அடையாளம் தவிர்த்து , தனது பெயரையும் அலெக்சாண்டர் சூப்பர்ட்ரேம்ப் (Alexander Supertramp)என்று மாற்றிக்கொண்டு மரப் பட்டிகளில் அதனையே பதிவு செய்கிறான்.
இனிமுதல் க்றிஸ் அலெக்ஸ் என்று இப்பதிவில் அழைக்கப் படுவான்.
அமெரிக்க நிலப்பரப்பின் சோள வயல்கள், புல்வெளிகள், நெடிய சாலைகள், பனிப்பரப்பு, பாலைநிலம், ஹிப்பிக் கூட்டங்கள் என்று அலெக்ஸின் பயணங்கள், அவன் சந்திக்கும் மனிதர்கள் என படம் மிக சுவாரஸ்யமாக செல்லும். கல்லூரிப் படிப்பை முடிக்கும் அலெக்ஸ் தனது 24000 டாலர் பணத்தை ஒரு அறக் கட்டளைக்கு நன்கொடையாக அளித்துவிட்டு வெகு சொற்ப அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களோடு தனது பழைய காரில் பயணத்தை ஆரம்பிக்கிறான்.
ஒரிடத்தில் இரவில் காரை நிறுத்தி தூங்கும்போது திடீர் வெள்ளம் காரை சேதப் படுத்தி விடுகிறது. பின்பு மீதமுள்ள பணத்தை எரித்துவிட்டு நடக்கத்தொடங்குகிறான். வழியில் ஒரு ஹிப்பிக் குடும்பத்தைச் சந்திக்கிறான். அவர்களோடு பயணிக்கிறான். அந்தப் பெண்ணுக்கும் ஹிப்பி ஆணுக்கும் இருக்கும் பிணக்கை சரிசெய்ய உதவுகிறான். பின்பு அங்கிருந்து சொல்லாமலே விடைபெற்று பயணித்து ஒரு சோள வயலில் கதிரறுக்கும் இயந்திர ஓட்டுனராக சேர்கிறான். ஒவ்வொரு பயணத்தையும் , வழியில் கிடைக்கும் உணவையும், செய்யும் வேலையையும் மிகுந்த ஈட்டுபாட்டுடன் செய்கிறான். ஒரு ஆப்பிளை அதனுடன் பேசிக்கொண்டே உண்கிறான். உன்னைப்போல சிறந்த ஒரு ஆப்பிளை என் வாழ்நாளில் நான் உண்டதில்லை , நீ மிகவும் உயிர்ச்சத்துள்ள ஆப்பிள் , உன்னில் ரசாயனம் இல்லை என்றெல்லாம் ஒரு குழந்தை போல பேசிக்கொண்டே உண்கிறான். அறுவடை செய்த சோளத்தை கிடங்கில் சேமிப்பதையும் ரசித்து செய்கிறான். அங்கே கெவின் என்பவனிடம் அலாஸ்காவில் உயிர்பிழைத்திருப்பது பற்றியும் மாமிசம் பதப்படுத்துவது பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்கிறான். இதில் கெவின் என்னும் சிறிய கதாபாத்திரத்தில் hang over இல் குண்டு தாடிக்காரராக வந்த Zach Galifianakis அடையாளமே தெரியாதபடி நடித்திருப்பார்.
Into-the-Wild-_6695_10
இந்தக் காட்சிகள் எல்லாமே தொடர்ச்சியாக இல்லாமல் நிகழ்காலமும் கடந்தகாலமுமாக மாறி மாறி வரும். சற்று கவனமில்லாமல் பார்த்தால் புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும்.
பயணத்தில் மீண்டும் ஒருமுறை அந்த ஹிப்பி தம்பதியினரை சந்திக்கிறான். இம்முறை நிறைய RV க்களில் ஹிப்பி குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. அதில் ஒரு பதின் வயதுப்பெண் அலெக்சிடம் ஈடுபாடு கொள்கிறாள். அலெக்ஸ் அவளை மறுக்கிறான்.
பின்பு ஓரிடத்தில் ஒரு வயதான மனிதரை சந்திக்கிறான் அலெக்ஸ். அவருடன் நட்பாக பழகி அன்பைப் பெறுகிறான். அவர் பெல்ட் செய்யும் முறையை இவனுக்கு சொல்லித்தருகிறார். அலெக்சை தத்தெடுக்கவும் அந்த மனிதர்விரும்புகிறார். அலெக்ஸ் தான் அலாஸ்கா சென்றுவிட்டு திரும்பி வரும்போது இதுகுறித்து முடிவு செய்வதாக கூறிவிட்டு விடை பெறுகிறான்.
அவர் அவனை ஒரு குறிப்பிட்ட தூரம் தன் மாநில எல்லை வரை கொண்டுவந்து விட்டு விட்டு பிரிகிறார். ரயில்கள் மூலமும் ,lift கேட்டு பல வண்டிகளில் ஏறி இறுதியில் அலாஸ்கா வந்தடைகிறான்.
into-the-wild-into-the-wild-09-01-2008-21-09-2007-3-gஒரு சிறு ஓடையைக் கடந்து வந்து ஒரு கைவிடப்பட்ட வேன் ஒன்றைக் காண்கிறான். அதனைத் தனது தங்குமிடமாக ஆக்கிக்கொள்கிறான். சிறு அணில்கள் , பிராணிகள் , பறவைகள் போன்றவற்றை வேட்டையாடி சுட்டுத்தின்கிறான். அந்த நிலப்பரப்பிரற்கான செடி வகைகள் பற்றிய புத்தகத்தைப் படித்து செடிகள் பற்றி அறிந்து கொள்கிறான். பனிக்காலம் வரும் முன் உணவு சேர்த்தாக வேண்டும். ஒருநாள் ஒரு மானைக் கொள்கிறான். அதனைப் பதப்படுத்தும் முன் ஈக்கள் முட்டையிட்டு புழுக்கள் வந்துவிடுகின்றன. விரக்தியில் அங்கிருந்து வெளியேற முயல்கிறான். ஆனால் இப்போது முன்பு அவன் கடந்து வந்த சிற்றோடை , பனி உருகி வெள்ளமாக ஓடுகிறது. மனமுடைந்து மீண்டும் தன் வேனில் அடைக்கலமாகிறான். குளிர் துவங்கும் நேரம் மிருகங்கள் எல்லாம் குளிர்கால தூக்கத்திற்கு சென்றுவிட , வேட்டைஇன்றி தாவரங்களை உண்ணுகிறான். அதில் எதோ ஒன்று ஒவ்வாமை ஆகி வலியில் தனது படுக்கையில் படுத்து மெல்ல கண்மூடுகிறான்இதயத்துடிப்பு அடங்குவதுடன் படம் முடிகிறது.
Christopher-and-the-142-bus1
                                                                       (Chris Mccandless-last Sefie)
மூன்று வாரங்கள் கழித்து சில வேட்டை ஆட்கள் அங்கே வந்து அலெக்ஸின் உடலைக் காண்கின்றனர். உணவின்றி இறந்ததாக உடல்பரிசோதனையில் தெரிகிறது. அங்குள்ள ஷெரிப் அலெக்சின் முடிவு , கண்மூடித்தனமான நம்பிக்கை மற்றும் மனவெழுச்சியின் மூலம் நேர்ந்த முட்டாள்தனம் என்கிறார். கிட்டத்தட்ட அது ஒரு தற்கொலை. அலெக்ஸ் நதியைக் கடக்க முயன்ற இடத்திற்கு கால் மைல் தொலைவிலேயே ஒரு சிறிய பாலம் இருந்தது. அலெக்சிடம் ஒரு காந்த திசைகாட்டியும் வரைபடமும் இருந்திருந்தால் அவன் தப்பித்திருப்பான் என்று கூறுகிறார்.
இளம் மனமானது தனது வலிமையினால் உலகையே வெல்லக் கூடியது. அத்தகைய மனம் படைத்த ஒரு இளைஞன் தான் நம்பிய துறவு நிலையே உண்மையான மகிழ்ச்சி என்று எண்ணி அதற்கா தன் உயிரையே இழந்த அனுபவங்களின் தொகுப்பு இது. அழகிய காட்சிகளுக்காகவும், மனமெழுச்சி கொள்ளும் தருணங்களுக்காகவும், வசனங்களுக்காகவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.
Posted in English Films | Tagged , , , , , , , | Leave a comment

The Shawshank Redemption

2009 ஆம் ஆண்டு. அப்போதுதான் நோக்கியா 5800   இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போன் என்னும் பெருமையுடன் களமிறங்கி சிலமாதங்களாயிருந்தது . திரைப்படங்களை Total video converter மூலம் மொபைல் திரைக்கு ஏற்றவகையில் மாற்றி மொபைல் மூலமே இரவுநேரங்களிலோ பயண நேரங்களிலோ பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தொகுப்பில் இந்தப் படமும் இடம்பெற்றிருந்தது. ஏனோ இந்தப் பெயரும் காட்சிகளும் இதனைப் பார்க்கவேண்டும் என்ற  எண்ணத்தை   ஏற்படுத்தவில்லை.பின்பு ஒருநாள் பார்க்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை எத்தனை  முறை பார்த்திருப்பேன் என்கிற கணக்கு இல்லை. இது என்னுடைய நிலை மட்டுமல்ல. மொத்த உலகமுமே இத்திரைப்படம் என்னும்போது என்னைப்போலத்தான் என்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் படித்தேன்.
Posterஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒருமுறை இத்திரைப்படத்தின் இயக்குனர் Frank Darabont டிடம் இத்திரைப்படம், ஒருமுறை நீங்கள் மிதித்துவிட்டால் உங்கள் காலணியோடு ஒட்டிக்கொள்ளும் சூயிங் கம் போன்றது. ஒருமுறை பார்த்தால் நம் மனதில் என்றென்றுமாய் ஒட்டிக்கொள்ளும் என்று கூறியிருக்கிறார். என்றால் இத்திரைப்படம் மக்கள் மனதில் உண்டாக்கிய தாக்கம் எத்தகையது என்று நாம் உணர்ந்துகொள்ளலாம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் தோல்வியும் அடைந்த ஒரு திரைப்படம் அதன் பின்பு கடந்த இரு தசாப்தங்களாக கோடானு கோடி மக்களை இன்றும் நினைவு கூர வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இங்கு கூட அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்கள் வெளியான போது பெரிய அளவில் வெற்றி பெறாமல் பின்பு மக்களிடம் நல்ல படம் என்று அங்கீகாரம் பெற்றது நமக்கு நினைவிருக்கலாம்.
Stephan King என்னும் புகழ் பெற்ற எழுத்தாளரின் Rita Hayworth and Shawshank Redemption என்னும் தொகுப்பிலிருந்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்தார் டாரபான்ட்.
1980 களின் இறுதியில் அந்த கதையை வெறும் 5000$ களுக்கு வாங்கினார் அப்போது பிரபலமடையாத டாரபான்ட். சிலவருடங்கள் கழித்து அக்கதைக்கு ஸ்கிரிப்ட் எழுதியவுடன் வெகு சீக்கிரமே ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஸ்டீபன் கிங்கின் சில கதைகளே ஏற்கனவே படமாகியிருந்த Rob Reiner என்பவர் தானே அக்கதையை படமாக்க எண்ணினார். மேலும் அப்போதுதான் டாம் க்ரூஸை வைத்து “ A Few Good Men” ஐ இயக்கியிருந்தார் , மீண்டும் ஒருமுறை டாம் க்ரூசுடன் இணைய அவர் உத்தேசித்திருந்தார். அவர் சார்ந்த காஸ்டில் ராக் நிறுவனத்தினர் பிரான்க்  டாரபான்டிடம் தங்கள் விருப்பத்தினைக் கூறுகின்றனர். பதிலுக்கு சில மில்லியன் டாலர் பணமும் தங்களது அடுத்த படத்தினை இயக்க வாய்ப்பும் அளிப்பதாக உறுதி கூறுகின்றனர். ஆனால் டாரபான்ட் தனது நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை. ஷாஷன்க் ரிடெம்ப்ஷனை இயக்கத் தொடங்குகிறார்.
Andy Dufresne (ஆன்டி டுப்ரேன் என்று உச்சரிக்க வேண்டுமாம்). Tim Robbins ஏற்று நடித்திருப்பார். ஆன்டி ஒரு வங்கி அதிகாரி. தன் மனைவியையும் அவளது காதலனையும் கொன்றுவிட்டதாக சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஷாஷன்க் சிறைக்கு அனுப்பப்படுகிறான். வருடம் 1947.
AR-AG107_Shawsh_J_20140522183402
அங்கே அவன் சிறை சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான், எப்படி அங்குள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொள்கிறான், வார்டனிடமும் சிறை அதிகாரிகளிடமும் எப்படி இணக்கமாகிறான், தன் எதிரிகளை எப்படி சமாளிக்கிறான், இறுதியில் எப்படி தப்பிக்கிறான் என்பதே கதை. கதை முழுவதும் Ellis Boyd Redding சுருக்கமாக Red , மார்கன் ப்ரீமென் தனது காந்தக் குரலில் மொழிவதாக (Narrative Style) அமைந்திருக்கும். படத்தின் பெரிய பலம் அதன் கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்கள். நாவலில் ரெட் கதாபாத்திரம் ஒரு ஐரிஷ் பூர்விகராக வடித்திருந்தார் கிங்.
திரைப்பட்டத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்கரான மார்கன் பிரீமன் ரெட்டிடம் ஆன்டி ஒருமுறை கேட்பார்.
Why they call you Red ? அதற்கு ரெட்டின் பதில்  “Maybe it’s because I’m Irish,”. முகத்தில் ஒரு மெல்லிய குறும்புடன் சொல்வார்.
மார்கன் பிரீமன் கதாபாத்திரம் கிட்டத்தட்ட கதாநாயகன் போலவே சித்தரிக்கப்பட்டிருக்கும். 40 ஆண்டுகள் சிறையிலிருக்கும் ஒருவர். சிறையின் ஒவ்வொரு வழமையையும் (Routine) அறிந்தவர். சிறையின் டிபார்ட்மெண்டல் ஸ்டோராக இருப்பவர்.
Andy Dufresne: I understand you’re a man who knows how to get things.
Red: I’m known to locate certain things from time to time.
படத்தில் துவக்கத்தில் ஆன்டி முதன்முதலில் சிறையுள் வரும்போதிருந்து ரெட்டின் மொழிபு (Narration) ஆரம்பிக்கும். 40 ஆண்டுகள் சிறையில் அவரது உருவ மாற்றமும் சிறப்பாக காட்டப் பட்டிருக்கும். இளம் வயது ரெட்டாக மக் ஷாட்களில்(Mug Shot) காண்பிக்கப்படும் புகைப்படம் உண்மையில் மார்கன்  பிரீமனின் மகன் Alfonso Freeman ஆவார்.படத்தின் துவக்கத்தில் ஒரு சிறிய சீனில் நடித்திருப்பார். ரெட்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஏறும் வயதும் கவனத்தில் கொள்ளப்பட்டு படம்பிடிக்கப் பட்டிருக்கும்.
red-all
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பற்றி எழுதவேண்டுமானால் தி ஷாஷன்க் என்று ஒரு தொடரே எழுதலாம். இந்தப்பதிவில் மேலும் இரண்டு கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்ப்போம். பைரன் ஹாட்லி மற்றும் நார்டன் தி வார்டன். ஹாட்லி சிறையின் ஒரு அதிகாரி. மூர்க்கமானவர். வார்டன் நார்டனின் கண்ணசைவு படி நடப்பவர். சிறையின் முதல் நாளில் இரவில் அழும் ஒரு குண்டான கைதியை அடித்தே கொல்வார்.
வார்டன் நார்டன் ஒரு கண்டிப்பான அதிகாரி. பைபிளின் மேல் பற்றுள்ளவர். சிறைத்துறை மூலம் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி கைதிகளை பொதுப் பணித்திட்டங்களில் குறைந்த சம்பளத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பவர்.
warden
ஹாட்லிக்கு ஒருமுறை ஆன்டி வருமான வரி பிரச்சனை ஒன்றைத் தீர்த்து வைக்கிறான். அதன் மூலம் வார்டனின் கவனத்திற்கு வந்து நூலகத்துறைக்கு மாற்றப் படுகிறார். பின்பு அங்கே வேலை செய்யும் காவலாளிகளின் வருமான வரி தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆலோசனை கூறி ஒரு முக்கியமான ஆளாகிறார். ஹாட்லி இப்போது ஆன்டியின்  எதிரிகளிடமிருந்து அவரைக் காக்கிறான்.
ஆன்டி அப்படியே வார்டனின் கணக்குகளையும் பார்த்துக்கொள்கிறார். முறைகேடான பணம் முறையான பணமாக மாற ஆண்டியின் ஆலோசனைகளை வார்டன் பயன்படுத்திக் கொள்கிறார். ஒரு போலி பெயரில் பல வங்கிகளில் கணக்கு துவங்கி அதில் முறைகேடான பணத்தை வரவு வைக்கிறார்கள்.
சிறையில் நேரம் அபரிமிதமாக இருக்கும். அங்கே ஒருவன் எவ்வளவு சீக்கிரம் தன்னைத்தானே வேலைகளின் மூலம் ஆக்கிரமித்துக் கொள்கிறானோ அந்த அளவுக்கு சிறைக் காலமானது சீக்கிரம் கழிவது போல இருக்கும்.  ஆன்டியும் தன்னுடைய பொழுதுபோக்குகளான சிறு சிற்பம் செதுக்குதல், சிறை நூலக மேம்பாடு போன்றவற்றில் ஈடுபட்டு தனது பொழுதைக் கழிக்கிறான். இவ்வாறே இருபது வருடங்கள் கழிகின்றன. பின்னொருநாளில் வரும் ஒரு புதிய கைதி மூலம் ஆன்டி டுப்ரேன் நிரபராதி என்று தெரியவருகிறது. கிட்டத்தட்ட பாதி படத்தில்தான் ஆன்டி நிரபராதி என்று நமக்குமே தெரிய வருகிறது. அவன் வார்டனிடம் இதுபற்றி கூறும்போது வார்டன் அதுகுறித்து விசாரிக்க மறுப்பதுடன் அந்த புதிய கைதியும் ஹாட்லி மூலம் கொலை செய்து விடுகிறான். ஆண்ட்டியையும்  தண்டிக்கிறார்.
தண்டனை முடிந்து வெளியே வரும் ஆன்டி ரெட்டின் நண்பர் மூலம் 6 அடி நீளக் கயிறு ஒன்றை வாங்குகிறான். அடுத்தநாள் காலை எண்ணிக்கையின் போது ஆன்டி தன அறையிலிருந்து மாயமாக மறைந்திருக்கிறான். அடுத்த சில நாட்களில் வார்டனின் போலியின் கணக்கிலிருந்த பணம் அனைத்தும் ஆன்டியால் எடுக்கப்புகிறது. கூடவே வார்டனின் முறைகேடுகள் அடங்கிய ஆவணம் பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்பட்டு வார்டனின் ஊழல் வெளியாகிறது. ஹாட்லி ஊழலுக்கு துணை போனமைக்காக கைது செய்யப்படுகிறான்.வார்டன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்.
இது எழுத்தில் வாசிக்க மிக சாதாரணமாக இருந்தாலும் வசனங்களும் திரைக்கதையும் இப்படத்தை ஒரு காலத்தால் அழிக்க முடியாத படமாக மாற்றுகின்றன. குறிப்பாக நம்பிக்கை பற்றி , சிறை வாழ்க்கை பற்றி ரெட் கூறும் வசனங்கள் உணர்ச்சி பூர்வமாக இருக்கும்.
Let me tell you something my friend. Hope is a dangerous thing. Hope can drive a man insane.
These walls are funny. First you hate ’em, then you get used to ’em. Enough time passes, you get so you depend on them. That’s institutionalized.
இந்த ஆங்கில வசனங்கள் இங்கே படிப்பதற்கு சாதாரணமாகத் தெரிகின்றன ஆனால் படத்தோடு ஒன்றிவிடும் நாம் இவ்வசனங்களின் சிறப்பை அங்கே உணர்வோம்.
இவ்வளவு சிறப்புகளோடு வெளியானாலும் படம் பாக்ஸ் ஆபீஸில் வெறும் 18 மில்லியன் டாலர்களே வசூலித்தது. இதற்கு பலகாரணங்கள் கூறப்படுகின்றன.. முதலில் இதன் தலைப்பு, தமிழில் “ஷாஷன்கின் மீட்சி” என்னும் அர்த்தம் வருகிறது. இது எதோ மத சம்பந்தப் பட்ட படம் என்று ஒரு சாரர் குழம்பினர். மேலும் படத்தில் பெண்களே இல்லை. முதல் சில காட்சிகளிலும் பின்பு ப்ரூக்ஸ் கிழவரும் ரெட்டும் ஒரு அங்காடியில் வேலை பார்க்கும் காட்சிகளில் மட்டும் பெண்கள் சிலர் காண்பிக்கப்படுவார்கள்.அதுவும் டைட்டிலில் பெயர்காண்பிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத பாத்திரங்கள். மேலும் 1994 இல் கூடவே வெளியான மெகா ஹிட் படமான Forrest Gump மற்றும் Cult படமான Pulp Fiction இரண்டும் வசூலை வாரிக்கொள்ள ஷாஷன்க் சுருண்டது.
1994 இல் ஏழு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பின்பே இத்திரைப்படம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டது. மீண்டும் ஒருமுறை வெளியிடப் பட இரண்டாவது வெளியீட்டில் மேலும் ஒரு பத்து மில்லியன் டாலர்கள் வசூலித்தது.
பின்பு ஷாஷன்கின் உண்மையான மறுபிறப்பு அல்லது மீட்சி எப்பொழுது வந்ததென்றால் 1997 இல் Ted Turner இன் TNT சேனல் ஷாஷன்கின் கேபிள் ஒளிபரப்பு உரிமையை பெற்றதிலிருந்துதான்.அதன்பின்பு TNT மற்றும் Turner இன் சேனல்கள் ஷாஷன்க் தொடர்ச்சியாக மக்கள் கவனத்தில் இருப்பதை உறுதி செய்தன. அதன் பின்பு The rest is History, There was no turning back என்னும் தேய்வழக்குகள் cliches இங்கே கனகச்சிதமாகப் பொருந்துகின்றன. ஷாஷன்க் திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்படுகிறது. மக்கள் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் பார்த்தார்கள். இங்கே ரஜினியின் பாட்ஷா போல, எம் ஜி ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் போல ஒரு நிரந்தர வருமானத்தை சேனலுக்கு அளித்துக் கொண்டிருந்தது ஷாஷன்க். முதலில் ஒரு சிறையைச் சுற்றி நடக்கும் கதை என்று ஒதுக்கிய மக்கள் பின்பு மெல்ல மெல்ல அதன் கதாபாத்திரங்கள் மேல் ஈர்க்கப் பட்டார்கள். நிஜ சிறையின் அவலங்கள் கொடுமைகள் எல்லாம் வெறும் கற்பனையிலேயே கண்டுகொண்டிருந்தவர்களுக்கு திரைக் காட்சிகள் ஆர்வத்தைத் தூண்டின. இவை எல்லாவற்றிற்கும் மேல் இத்திரைப்பட்டம் உணர்த்தும் கருத்து, திரைப்படத்தின் பேசு பொருளான “நம்பிக்கை” உலக மக்களை எல்லாம் இன்றும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இத்திரைப்படம் நடைபெறுவதாக காண்பிக்கப்பட்ட ஓஹையோ Ohiyo மாகாணத்தில் இத்திரைப்படத்தில் வரும் சிறை, நீதிமன்றம், ஓக் மரம் என்று 14 இடங்கள் ஒரு சுற்றுலா மூலம் மக்களுக்கு காண்பிக்கப்படுகிறது. இது போக வீடியோ வாடகை, நெட்ப்ளிக்ஸ் போன்ற இணைய திரைப்பட ஒளிபரப்பாளர்கள், DVD வருமானம் என்று ஷாஷன்க் இன்றளவும் ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகவே மாறியிருக்கிறது.
போன வருடம் மட்டும் 151 மணிநேரங்கள் ஷாஷன்க் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.
shawshank-tree
வார்டனாக நடித்த Bob Gunton இன்றும் பொது இடங்களில் யாராவது அவரைப் பார்த்து ஹேய் இது ஷாஷன்கின் வார்டன் என்று அடையாளம் கண்டுகொள்வதாகக் கூறுகிறார்.
கண்டிப்பாக நாம் அனைவரும் காணவேண்டிய திரைப்படம் இது. ஆங்கிலத்தில் சப்டைடில்களோடு பார்த்தால் வசனங்கள் நன்கு புரியும். தமிழில் கூட tamilrockers.net இல் ப்ளூரே 720p dubbed version கிடைக்கிறது.தவற விடாதீர்கள்.
மேலும் ஷாஷன்க் குறித்த தகவல்கள் செய்திகளை வரும் பதிவுகளில் பதியும் எண்ணம் உள்ளது.
Posted in English Films | 2 Comments

காட்சிமொழி – தளக்குறிப்பு !

திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் பழக்கம் 2007 இல் தொடங்கியது. ஒரு உருப்படியான வேலை கிடைத்து , பாண்டிச்சேரியில் நண்பர் வேல் அறையில் அடைக்கலமான புதிது. சனி மற்று ஞாயிற்றுக் கிழமைகளில் வேலின் அறையில் இருந்த குறுந்தகடுகள் எங்கள் பொழுதுகளை இனிதே கழிக்க உதவின.குறிப்பிட்ட ரசனை எதுவுமின்றி வகை தொகை இல்லாமல் படங்களைப் பார்ப்போம். பின்நாட்களில் ஒரு குறிப்பிட்ட ரசனை வளரவும் ஹாலிவுட் படங்களைப் பற்றிய ஒரு புரிதல் வரவும் அந்த 15 ரூபாய் dvd  க்களே காரணம். வலையுலகில் அதிகம் படித்த சினிமா தொடர்பான கட்டுரைகள் விமர்சனங்கள் என்னையும் ஒரு வலைப்பதிவராக மாற்றின கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் 2009-2012 சற்று போராடிப்பார்த்துவிட்டு தற்போது விட்டுவிட்டேன். என்றாலும் ஏதேனும் எழுதவேண்டும் என்ற உள்ளக்கிடக்கை அவ்வப்போது வந்து உறுத்திக்கொண்டே இருக்கும். நமக்கு அதிகம் யோசிக்க வைக்காத சில தலைப்புகளில் சினிமாவும் இசையும் முதலிடம் பெறும்.
        அதற்காக ஒரு தனியான இணைய தளம் ஒன்றைத் தொடங்கலாம் என்றெண்ணியே இந்த முயற்சி. இசையைக் கேட்பதைத் தவிர வேறெதுவும் விமர்சனக் கூறுகள் அறியேன். போலவே திரைப்படங்களும். எனவே இத்தளத்தில் விமர்சனங்கள் என்று எதுவும் எடுத்து வைக்க ஒன்றும் இல்லை, எனது எண்ணங்களே பகிரப்படும். அதிகமும் தமிழ், ஆங்கிலம், மலையாளப் படங்கள் , எப்பொழுதாவது ஹிந்தி கொரியப் படங்கள் பார்ப்பதுண்டு. இசையப் பொறுத்தவரையில் மிக சராசரி நான் . 80 களின் இளையராஜவிலேயே தேங்கிவிட்ட ரசனை என்னுடையது.அதற்காக ரஹ்மானும் ஹாரிசும் யுவனும் என் பட்டியலில் இல்லை என்றில்லை. ஹிந்தி கேட்பதுண்டு. ஆங்கிலம் அறவே இல்லை. நான் பார்த்த கேட்ட ரசித்த பாடல்கள் , படங்கள் பற்றி பல பிரபல பதிவர்கள் எழுத்தாளர்கள் ஏற்கனவே எழுதியிருக்கலாம். என்றாலும் வரலாற்றில் என் பெயரையும் பொறிக்கும் ஒரு சிறு முயற்சி இது ( கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ ?). வாரம் ஒரு பதிவு என்பது என் எண்ணம். என் சோம்பேறித்தனம் வென்றால் அது சற்று கடினம்தான், என்றாலும் முயல்கிறேன். மேலும் உங்கள் நல்லாதரவை வேண்டி நிற்கிறேன். தற்போது ஒரு அடிப்படையான வார்ப்புருவில் (template) இந்த  தளத்தைக் கட்டமைத்திருக்கிறேன். போகப்போக மெருகேற்றுவேன், வடிவையும் உள்ளடக்கத்தையும்!
Posted in General | Leave a comment