Kung fu Panda (2008)

அனிமேட்டட் படங்கள்  பொதுவாக என்னை  அவ்வளவாக கவர்ந்ததில்லை. Fantasy வகை திரைப்படங்கள், ஏலியன் பூமியை அழிப்பது போன்ற பிரம்மாண்டங்கள் , காட்சில்லா, ஜுராசிக் பார்க் போன்ற படங்களை எல்லாம் வசனம் புரியாமல் காட்சிகள் மூலமே கதையை குத்து மதிப்பாக புரிந்துகொள்கிற வயதில்  விரும்பி பார்த்தேன். பின்பு சப்டைட்டில் உதவியுடன் வசனங்கள் புரிய ஆரம்பித்த போது பிரம்மாண்டம் தவிர்த்த படங்களை அதிகம் பார்க்க ஆரம்பித்தேன். அனிமேஷன் படங்கள் என்றால் சற்று தள்ளியே செல்வது என்வழக்கம். இத்தனைக்கும் தூர்தர்ஷனில் கார்டூன் படங்கள் அதிகம் ஒளிபரப்ப மாட்டார்களா என்று ஏங்கிய காலங்கள் உண்டு. தொண்ணூறுகளில்   செவ்வாய் கிழமை மாலை 4.30 க்கு வொண்டெர் பலூனில் ஒரு கால் மணிநேரம், ஞாயிற்றுக் கிழமை ரங்கோலிக்கு முன் ஒரு அரை மணிநேரம் , அப்புறம் ஜங்கிள்  புக், டேல்ஸ் பின் , டக் டேல்ஸ் என்று மொத்தமே வாரத்திற்கு  3 மணிநேரங்கள் மட்டும் கார்டூன் படங்கள் காணக்  கிடைத்தன. தற்போது  கார்டூன் நெட்வொர்க் , நிக் அது  இதுவென 24 மணி நேரமும் கார்டூன்  கிடைத்தாலும் காத்திருந்து கண்ட நாட்களின் சுகம் கிட்டாது. சரி ப்ளாஷ் பேக்கிலிருந்து மீள்வோம்.
2009 ஆண்டு முதன் முதலில் Wall E என்னும் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் என்னமோ அனிமேஷன் என்றாலும் அதன் கதை திரைக்கதை ,எந்த ஒரு அனிமேஷன் அல்லாத படத்துக்கும் சற்றும் குறைந்ததல்ல என்று தோன்றியது. குறிப்பாக ரோபோக்கள் செய்யும் சேட்டைகள் , அவற்றின் மன ஓட்டத்தைப் எதிரொளிக்கும் முகம் என்று தூள் கிளப்பியிருந்தார்கள். பின்பு அட அனிமேஷன் படம்தானே என்று அவற்றை அலட்சியமாக ஒதுக்க என் மனம் இடம் தரவில்லை.  Finding Nemo , Antz , Rio, என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறவிடாமல் பார்த்தேன். அப்படி ஒருநாள் sony pix இல் பார்த்த படம்தான் குங்க்பு பாண்டா.
kung-fu-panda
முதல் முறை பார்த்த போது பாண்டாவின் நகைச்சுவை காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவையாக இருந்தன. பின்பு ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் அதனுள் இருக்கும் மிகச்சிறந்த தத்துவங்கள் , தரிசனங்கள் புலப்பட ஆரம்பித்தன.
சிலப்பதிகாரம் சொல்லும் மூன்று உண்மைகள் போல , குங்க்பு பாண்டாவிலும் மூன்று முக்கிய தத்துவங்கள் உள்ளன
1. There are no accidents. நிகழ்வதில் விபத்து என்று எதுவும் கிடையாது. முன்னர் தீர்மானிக்கப் பட்டதே நடக்கின்றன
2. You just need to believe. உன்னை நீ நம்பு ! எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் .
3. There is no secret ingredient. அதாவது ரகசிய இடுபொருள் என்று எதுவும் கிடையாது. சுவை என்பது நம் மனம் நினைப்பதே.
கண்டிப்பாக இந்த உண்மைகள் கீதையிலோ அல்லது எதோ உபநிஷதங்களிலோ காணக்கூடும்.கீழைத் தேசங்களான இந்தியா சீனா ஜப்பான் போன்றவற்றிற்கு பொதுவான தத்துவங்கள் இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக சீனாவின் மேல் இந்தியா பண்பாடு ரீதியான மேலாதிக்கம் கொண்டிருந்தது. கடந்த 300 ஆண்டுகளில் மெக்காலே கல்வி மூலம் மாபெரும் பண்பாட்டின் கூறுகளை மறந்து அலட்சியப்படுத்தி இன்று ஒரு ரெண்டும்கெட்டான் நிலையில் நிற்கிறோம்.
இந்த திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்காக கதைச்சுருக்கம்.
அமைதிப்பள்ளத்தாக்கு என்னும் ஊரில் மாஸ்டர் ஷிபு (ஒரு சிகப்பு பாண்டா கரடி), தன குரு ஊக்வே (ஆமை) மற்றும் தன் சீடர்கள் புலி, குரங்கு,கொக்கு, பாம்பு மற்றும் கும்பிடும் வெட்டுக்கிளியுடன் (ஆகரோஷ ஐவர்) மடாலயத்தில் வாழ்ந்து வருகிறது. ஷிபுவின் வளர்ப்புப் பிள்ளையான தாய் லங் என்னும் சிறுத்தை அக்கிரமம் செய்ததால் ஊக்வே அதனை சிறைப்படுத்தி விடுகிறது.
ஒருநாள் ஊக்வே , ஷிபுவிடம் தாய் லங் சிறையிலிருந்து  தப்பித்து விட்டுவதாகக் தனக்கு தோன்றியது என்கிறது. தாய் லங்கை தற்போது யாராலும் வெல்ல முடியாது. டிராகன் போராளி மட்டுமே வெல்ல முடியும். எனவே இப்போது டிராகன் போராளியைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது என்று முடிவு செய்கின்றன.  டிராகன் போராளியைத் தேர்ந்தெடுக்கும் நாள் வருகிறது. அந்த நிகழ்ச்சியைக் காண ஊரே திரண்டு மலையிலிருக்கும் மடாலயத்தில் ஒன்று கூடுகின்றது.
அந்த ஊரில் ஒரு நூடுல்ஸ் மற்றும் டம்ப்ளிங் எனப்படும் மோமோ விற்கும் உணவகத்தை ஒரு வாத்து நடத்தி வருகின்றது. வாத்தின் வளர்ப்பு மகன்தான் போ என்னும் பாண்டா கரடி. போ ஒரு தீவிர குங்க்பு ரசிகன். ஆக்ரோஷ ஐவரின் விசிறி. குங்க்பு கலையில் சிறந்து விளங்க வேண்டும் என்று கனவு காண்பவன். போ வின் அறிமுகக்காட்சி அதகளமாக இருக்கும். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டது . தீனி மாடன். தன்னை வளர்த்து வரும் வாத்தின் உணவகத்தில் உதவி செய்கிறது.
டிராகன் போராளியைக் காணும் ஆசையில் போவும் புறப்படுகிறது. அப்போது வாத்து , ஊரே மடாலயத்தில் இருக்கிறது, அங்கே சென்றால் நிறைய உணவை விற்கலாம் என்று போவிடம் உணவு வண்டியை கொடுத்து விடுகிறது.
போ வின் மிகப்பெரும் எதிரி படிக்கட்டுகள். மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க , தனது வண்டியுடன் போ மேலேறி வருவதற்குள் மடாலயத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. உள்ளே ஆக்ரோஷ ஐவர் தத்தமது வித்தைகளை ஊக்வேயிற்கு காட்டிக்கொண்டிருக்கின்றனர். போ என்னென்னவோ முயற்சிகள் செய்து உள்ளே நடப்பனவற்றைக் காண முயல்கிறது. கடைசியாக ஒரு நாற்காலியில் ராக்கெட் வெடிகளை கட்டிக் கொண்டு பற்றவைத்து பறந்து வந்து மைதானத்தினுள் விழுகிறது. சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ராக்கெட் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அந்த நேரம் பார்த்து ஊக்வே தனது விரலை போ வை நோக்கி நீட்டி போ தான் டிராகன் போராளி என்கிறது
PoOogwayDW
ஷிபுவும், ஆக்ரோஷ ஐவரும் மிகுந்த அதிர்சிக்குள்ளகின்றனர். அனைவருமே புலிதான் அடுத்த டிராகன் போராளி என்று நினைத்துக் கொண்டிருந்தனர். உடனே ஷிபு ஊக்வேயிடம் , நீங்கள் தவறுதலாக போவை சுட்டிக்காட்டி விட்டீர்கள். இது ஒரு விபத்து என்று வாதிடுகிறது. அதற்கு ஊக்வே நிகழ்வதில் விபத்து என்று எதுவும் கிடையாது. முன்னர் தீர்மானிக்கப் பட்டதே நடக்கின்றன என்கிறது . முதல் தத்துவம் 🙂
ஷிபுவிற்கு போ வை எப்படியாவது விரட்டிவிட வேண்டும். முதல் நாள் பயிற்சியின் போது ஷிபு போவிடம் உனக்கு குங்க்பு வில் எவ்வளவு தெரியும் ? ஏதாவது ஒரு நிலையில் துவங்கலாம். நீ சொல் எந்த நிலையில் துவங்கலாம் என கேட்கிறது . போ அதற்கு பூச்சியம் என்னும் நிலையிலிருந்து துவங்கலாம் என்கிறது. ஷிபு , பூச்சியம் என்று ஒரு நிலை கிடையாது என்று கூறிவிட்டு அங்கிருக்கும் கருவிகளுடன் போவை மோதவிடுகிறது. குண்டக்க மண்டக்க அடிபடும் போவை பார்த்து ம்ம்ம் இப்போது பூச்சியம் என்று ஒரு நிலை உள்ளது என்று ஏளனம் செய்கிறது.ஆக்ரோஷ ஐவர் கூட்டணியும் போவை ஏளனப்படுத்துகின்றது.
மனம்வருந்தும் போ தனியாக ஒரு மரத்தின் அடியில் நின்று பழங்களை தின்றுகொண்டிக்கிறது. அப்போது ஊக்வே அங்கே வருகிறது. நீ ஏன் கவலையோடு இருக்கிறாய் என்று கேட்கும் ஊக்வேயிடம் , ஷிபு என்னைக் கண்டாலே வெறுக்கிறார். ஐவரும் வெறுக்கிறார்கள் பேசாமல் நான் கிராமத்திற்கு போய் நூடுல்ஸ் செய்யப் போகிறேன் என்று புலம்புகிறது. அதற்கு ஊக்வே நீ நேற்று நடந்ததையும் நாளை நடக்கப்போவதையும் நினைத்து வருந்தாதே. நேற்று என்பது முடிந்து போன விஷயம் , நாளை என்பது நாம் அறியாயது , இன்று என்பதே நிகழ்காலம் அதுதான் முக்கியம் என்று கூறிவிட்டு செல்கிறது. ஆங்கிலத்தில் இந்த வசனங்கள் மிக அருமையாக இருக்கும் , தமிழ் மொழி பெயர்ப்பில் அதன் உண்மையான அர்த்தத்தை என்னால் கொண்டுவர முடியவில்லை.
Po: Maybe I should just quit and go back to making noodles.
Oogway: Quit, don’t quit? Noodles, don’t noodles? You are too concerned about what was and what will be. There is a saying: yesterday is history, tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the “present.”
போ விற்கு எதோ ஒன்று புரிந்த மாதிரி இருக்கின்றது. மறுநாள் தெளிவுடன் பயிற்சிக்கு செல்கிறது. எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறது . என்ன செய்தாலும் உண்மையான வீரன் ஒருபோதும் பாதியில் விட்டுவிட்டு ஓடி விடமாட்டான் என்று உறுதியுடன் கூறி நிற்கிறது.
இம்முறை கவலை ரேகைகள் ஷிபுவின் முகத்தில். போ ஒரு பாண்டா , குங்க்பு கற்றுக்கொள்ள சிரமப்படுகிறது. எப்படி போ வை ஒரு குங்க்பு வீரனாக்குவது என்று குழம்புகிறது. இந்நிலையில் தாய் லங் தப்பிவிட்ட செய்தி வந்தடைகிறது. கவலையுடன் ஷிபு ஊக்வேயை நோக்கி ஓடுகிறது.
ஷிபு :மாஸ்டர் மாஸ்டர் ஒரு கெட்ட செய்தி.
ஊக்வே :ஷிபு செய்தி என்ற ஒன்றுதான் உண்டு , அதில் நல்லது கெட்டது என்று                       எதுவும் கிடையாது.
ஷிபு :  மாஸ்டர் தாய் லங் தப்பி விட்டது
ஊக்வே : ஹ்ம்ம் இது நிச்சயமாக கெட்ட செய்திதான் ,
இதில் இருக்கும் மெல்லிய நசைச்சுவையை நாம் கவனிக்க வேண்டும்.
ஊக்வே தொடர்கிறது , டிராகன் போராளி தாய் லங்கை தடுத்து நிறுத்துவான் என்று நீ நம்பாதவரை இது கெட்ட செய்திதான்,
ஷிபு : என்னால் எப்படி முடியும்? எனக்கு உங்கள் உதவி தேவை.
ஊக்வே: இல்லை ஷிபு , நீ உன்னை  நம்ப வேண்டும் , போ விற்கு உன்னால் பயிற்சி அளிக்க முடியும் என்று நம்ப வேண்டும்
என்று ஊக்வே ஷிபுவிடம் கூறிவிட்டு காற்றில்  கலந்து விடுகிறது.
No, you just need to believe. Promise me, Shifu, promise me you will believe.
இது இரண்டாவது தத்துவம் 🙂
தளர்ந்த மனதுடன் மடாலயத்திற்கு வரும் ஷிபு சமயல் அறையில் போ நொறுக்குத் தீனி தேடி அனாயசமாக உயரங்களில் ஏறுவதையும் , அதன் உடல் ஒத்துழைப்பதையும் கண்டு , உணவின் மூலமே இதற்கு பயிற்சி அளிக்க முடியும் என்று முடிவுக்கு வருகிறது.பின்பு அவ்வாறே பயிற்சி அளித்து போவை குங்க்பு வில் தேர்ச்சி பெற வைக்கிறது. பின்பு சிறந்த சக்தியை டிராகன் போராளிக்கு அளிக்கும் டிராகன் சுருள் ஒன்றை போ விற்கு அளிக்கிறது.ஆனால் அது வெறும் ஒரு பிரதிபலிக்கும் சுருள் . அதில் ஒன்றுமே எழுதப்பட்டிருக்க வில்லை. போவும் ஷிபுவும் ஏமாற்றமடைகின்றன.
Kung-Fu-Panda-Wallpaper-Dekstop-12633-Wallpaper
இதற்கிடையில் ஷிபுவின் ஐந்து சீடர்களும் தாய் லங்கை தடுத்து நிறுத்த செல்கின்றன . ஆனால் தாய் லங் அவர்களைத் தாக்கி திருப்பி அனுப்பி விடுகிறது. போ பயந்துவிடுகிறது. குங்க்பு கலையில் சிறந்து விளங்கும் ஐவராலேயே முடியவில்லை நாம் எப்படி தாய் லங்கை நிறுத்தப் போகிறோம் என்று பயந்து டிராகன் சுருளை எடுத்துக்கொண்டு ஊருக்குள் தந்தையிடம் செல்கிறது.ஷிபு முடிந்த வரையில் தாய் லங்கை தடுப்போம் என்று மடாலயத்தில் தங்கி விடுகிறது. ஊருக்குள் அனுப்பி ஊரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல கூறுகிறது.
ஊருக்குள் வரும் போ தன் தந்தை வாத்திடம் செல்கிறது. வாத்தும் தனது பொருட்களுடன் ஊரை விட்டு செல்ல தயாராகிக்கொண்டு இருக்கிறது. போவைப் பார்க்கும் வாத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. பின்பு இருவரும் உடைமைகளை தூக்கிக் கொண்டு நடக்கின்றன. அப்போது வருத்தத்துடன் காணப்படும் போவிடம் , நான் ஒரு உண்மையை உனக்கு சொல்லவா ?
நான் செய்யும் சூப்பில் ,நான் சேர்க்கும் ரகசிய இடுபொருள் தான் அதன் சுவைக்கு காரணம் என்று பலமுறை உன்னிடம் கூறியிருந்தேனே , உண்மையில் ரகசிய இடுபொருள் என்று ஒன்று கிடையாது , அது சிறந்த சூப் என்று உன்மனம் நம்பினால் போதும். அதுவே அதை சிறந்தது ஆக்கும் என்று கூறுகிறது.
There is no secret ingriedient – தத்துவம் மூன்று 🙂
போ உடனே தன்னுடைய டிராகன் சுருளை விரித்து பார்க்கிறது. தன் முகம் அதில் தெரிகிறது. உண்மையான டிராகன் போராளிக்கு சக்தி அளிக்க மந்திரம் எதுவும் தேவை இல்லை. தான் மனதார நம்பினால் மட்டும் போதும் என்கிற உண்மை புரிகிறது. உடனே சிபுவைப் பார்க்க விரைகிறது.பின்பு தாய் லங்கை தோற்கடித்து அமைதிப் பள்ளத்தாக்கை காக்கிறது. சுபம். நீண்ட கதைச் சுருக்கம் இங்கு முடிகிறது.
Dream work நிறுவனத்தாரின் இப்படைப்பு 2003 இல் தொடங்கி 2008 இல் முடிந்தது. நான்கு வருடங்கள். எதிலும் துல்லியம் அதி துல்லியம் ஒன்றே குறிக்கோள். முதலில் இதனை ஒரு பகடி வகையிலான படம் போல எடுக்க நினைத்தனர். பின்பு முடிவை மாற்றிக் கொண்டு ஒரு தீவிர குங்க்பு படமாக எடுத்தனர். இதற்காக குங்க்பு அசைவுகளை உண்மையாகக் கொண்டுவர அனிமேட்டர்கள் குங்க்பு பயிற்சியும் மேற்கொண்டனர். சீனக் கலாசாரம் பற்றியும் குங்க்பு கலை பற்றியும் தீவிர ஆராய்ச்சி செய்து முடிந்த வரையில் நேர்மையாக திரையில் கொண்டு வந்தனர்.
இதற்கு வேலை செய்த ஒலிப் பொறியாளர்களின் பணி மிகக் கடினமாக  இருந்தது. போ வின் வயிறு குலுங்கும் போது ஏற்படும் சத்தம் முதல் தாய் லங் இறுதிக் காட்சியில் தன் வாலை தானே கடிக்கும் போது ஒலிக்கும் ம்யூன்க் என்னும் ஒலி வரை ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து ஏற்படுத்தினர். மேலும் இந்தப் படம் சீன ஆக்ஷன் காமடி வகையான குங்க்பு ஹசில் முதல் க்ரவுச்சிங் டைகர் ஹிட்டன் டிராகன் வரை பல படங்களால் கவரப்பட்டு சண்டைக்காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும்.
முதலில் பாத்திரத் தேர்வு போ ஒரு பாண்டா கரடி . அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு இனம் , ஷிபு ஒரு செம்பாண்டா இதுவும் அழிவில் இருக்கும் ஒரு இனம் ,டைக்ரஸ் ஒரு தென் சீனப் புலி, ஊக்வே ஒரு ஆமை, குரங்கு ஒரு தங்க நிற நீல முகக் குரங்கு, வெட்டுக்கிளி ஒரு சீன மாண்டிஸ். தாய் லங் ஒரு பனிச் சிறுத்தை.
இவற்றிக்கு குரல் கொடுத்ததும் பெரிய பெரிய நடிகர்கள். இது பற்றி மேலதிக தகவல்கள் விக்கியில் நிறையக் கிடைக்கின்றன.
இத்திரைப்படம் சீனாவில் வெளியான போது சீனர்களே மிரண்டு விட்டார்களாம். எப்படி ஒரு அமெரிக்க நிறுவனம் நமது பண்பாட்டை ஒட்டி இப்படி ஒரு சிறந்த படைப்பை வழங்க முடிந்திருக்கிறது என்று. அப்படியென்றால் எத்தகைய உழைப்பைச் செலுத்தியிருப்பார்கள் ?
KUNG FU PANDA 5
போவின் தந்தை வாத்து ஒரு முள்ளங்கியை வெட்டும்போது முள்ளங்கியில் தெரியும் கிழங்கின் குறுக்குவெட்டுத் தோற்றம் கூட கவனத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார்கள்.
இறுதிக்காட்சியில் போ தாய் லாங்கின் விரல்களைப் பிடித்துக் கொண்டு ஊக்சி விரல் பிடி என்னும் முறையில் தன் சுண்டு விரலால் “ஸ்கிடூஷ்”என்று கூறியபடி அழுத்தி தாய் லங்கை அழிக்கும். டெர்மினேடரில் அர்னால்ட் அஸ்டல விஸ்டா பேபி என்பாரே அதுபோல. இதுபோல சின்னச் சின்ன புரியாத வார்த்தைகளை போ படத்தின் துவக்கத்திலும் கூறும்.
skadoosh+_1d45a173b2a9bb241557eaafbcc0742c
இப்படத்தின் தலைமை அனிமேட்டர் தன் குழுவிடம் இவ்வாறு சொல்கிறார் . நாமெல்லாம் இதற்கு முன் எத்தனையோ குப்பை படங்களில் வேலை செய்திருப்போம். எப்போதாவது அபூர்வமாகத்தான் ஒரு ரத்தினம் போன்ற படம் கிடைக்கும். குங்க்பு பாண்டா ஒரு ரத்தினம். எனவே நாம் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்கிறார். கண்டிப்பாக இது குழந்தைகளுக்கான படம் கிடையாது. பெரியவர்களுக்கான படமும் கூட. நம் வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களை நகைச்சுவையாக கூறி நம் மனதில் இடம்பிடிக்கும் இப்படம் கண்டிப்பாக தவறவே விடக்கூடாத திரைப்படம்.
Advertisements
This entry was posted in English Films and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s