தமிழ்த் திரைப்படங்களில் நாயகன் அறிமுகம் வெகு சில வகைகளிலேயே அமையப் பெற்று வந்துள்ளது. ஒன்று நாயகன் ஒரு ஏழைப் பங்காளனாக காட்டிக்கொள்ளும் வண்ணம் ஒரு பாடல் , இது பரவலாக எம் ஜி ஆர் , சிவாஜி திரைப்பட்டங்களில் கையாளப்பட்டது.பின்பு 80 களில் , திமிர் பிடித்த நாயகியை அடக்கும் விதமாக நாயகன் பாடும்படி , அல்லது காரில் கார்பரேட்டர் சூடாகி அதற்கு நீர் பிடிக்க வரும் நாயகி , நாயகன் சோகமாக பாடுவதைக் கேட்பதுபோல சிலகாலம் தொடர்ந்தது. பின்பு தனித்துவமான ஹீரோ அறிமுகப் பாடல் என்பது 80களின் பிற்பகுதியில் , ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்காக நல்ல ஜனரஞ்சகமான மெட்டுக்களுடனும் வண்ணமயமான உடைகள் நடன அசைவுகள் மூலமாகவும் , பாடல் வரிகளில் நாயகனின் வீர தீர பராக்கிரம வள்ளல் குணநலன் பற்றி எடுத்துரைப்பதாகவும் அமைந்தன. என்னளவில் அதற்கான கச்சிதமான இலக்கணங்கள் ரஜினி நடிக்கும் படங்களில் மட்டுமே காணப்பட்டதாக உணர்கிறேன்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் ரஜினி தளபதி மூலம் வேறொரு தளத்திற்கு சென்றிருந்தாலும் , அதில் அவருக்கு அறிமுகப்பாடல் என்ற ஒன்று இல்லை. சண்டைக்காட்சி மூலமே அறிமுகமாவார். மன்னனிலும் அந்த விமான நிலையம் விஜய சாந்தி மோதல் காட்சி மூலமாகவே அறிமுகமாவார். பின்பு ரஜினிக்கென தனித்துவமான அறிமுக இசை , அண்ணாமலை படத்தில் தேவா இசையமைப்பில் ஜேம்ஸ் பாண்ட் ரக இசையோடு SUPERSTAR என்று எழுத்துக்கள் பறக்கும்போது அப்படியே நாடி நரம்பெல்லாம் ஜிவ்வென்று முறுக்கேறி தலைவா என்று கத்தி ஆர்ப்பரிக்கும் நிலைக்கு ரசிகர்களை இட்டுச் சென்றது.
ஆனால் சந்திரமுகிக்கு பின்னால் வந்த ரஜினியின் படங்களில் அந்த ட்ரேட் மார்க் இசை இல்லாதது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.அண்ணாமலையில் ரஜினிக்கு அறிமுகப்பாடலான வந்தேண்டா பால்காரன் , பாட்ஷாவில் ஆட்டோகாரன் , முத்துவில் ஒருவன் ஒருவன் முதலாளி இந்த மூன்று பாடல்களும் ரஜினியின் திரை அறிமுகப் பாடல்களில் முதலில் இடம் பெறுபவை.
மாறாக ரஜினியின் சமகாலப் போட்டியாளராக இன்றளவும் நீடிக்கும் கமலுக்கு ஏனோ அறிமுகப் பாடல் என்பது அத்தனை மாஸ் தனமான பாடல்களாக இல்லை என்பது என் எண்ணம். வெகு அபூர்வமாக விருமாண்டியில் கொம்புல பூவ சுத்தி , விஸ்வரூபத்தில் எவனென்று நினைத்தாய் ( இது அறிமுகப் பாடல் இல்லை எனினும் வீர தீர குணநல பறைசாற்றுதல் என்னும் வகையில் கணக்கில் கொள்ளலாம் ) என மூளையைக் கசக்கினால் சில பாடல்கள் தேறும். Who’s the hero மன்மதன் அம்புவும் ஒரு நல்ல பாடல்.
இந்த சில படங்களுக்கு நடுவில் அந்தக் குறையை ஓரளவுக்கேனும் நீக்கியது கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு. ஹாரிஸ் ஜெயராஜ் படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்த நாட்கள் அவை. முத்து முத்தான பாடல்கள் , பார்த்த முதல் நாளே என்னும் ஒரு தோத்திரப் பாடல் தழுவல் உட்பட.இதிலும் கற்க கற்க என்னும் அந்த சிறப்புமிக்க பாடல் கமலுக்கு அறிமுகப் பாடல் இல்லை எனினும் விஸ்வரூபம் ரீதியில் இவரு ஒரு நாயக வழிபாட்டுப் பாடல்.பாடல் துவங்கும்போழுதே ஆர்ப்பரிக்கும் இசை இது ஒரு அதிரடிப்பாடல் என்பதைக் கூறுகிறது , பின்பு வரும் ஆங்கில வரிகள் Raghavan, Stay in the process Top Dollar, Lil Curry Fizz, Akhenaton, Ready come on , yeah , lets go ..
பின்பு ஒலிக்கும் கிடார் , ட்ரம்ஸ், ஆழமான பாஸ் தொகுப்பு என அட்டகாசமான நாயக வழிபாட்டுப் பாடலாக இதனை கொண்டுவந்திருப்பார் ஹாரிஸ். கிளாசிகல் கிடார் வல்லுனரான ஹாரிஸ் , இளையராஜாவிற்குப் பிறகு தனித்துவமான நடையில் பாடல்களில் கிடார் இசையைக் கோர்ப்பதில் வல்லவர். மின்னலேயில் துவங்கி கவுதம் மேனன் படங்களில் இவரது இசையானது மற்ற இயக்குனர்களின் படங்களில் இடம் பெற்ற பாடல்களை விட அழகாக அபாரமாக இருக்கும். இதற்கு இயக்குனரின் தனிப்பட்ட ரசனை ஒரு முக்கிய காரணம். கௌதம் மேனன் எப்போதுமே தான் ஒரு வெறித்தனமான இளையராஜா ரசிகன் என்று கூறியிருக்கிறார். இளையராஜாவின் இசையில் , குறிப்பாக கிடாரில் மயங்கியே ஹாரிஸிடம் இனிய கிடார் மெட்டுக்களை இசையமைக்க சொல்லியிருக்கிறார்.
முன்பு எதோ ஒரு பத்திரிகையில் வேட்டையாடு விளையாடு குறித்து ஒரு பேட்டியில் கௌதம் இவ்வாறு கூறினார் , தான் ஒரு வெறித்தனமான கமல் ரசிகன் என்றும் , ஒரு ரசிகன் தன் அபிமான நாயகனை எப்படியெல்லாம் திரையில் காண வேண்டும் என்று நினைப்பானோ அப்படி கற்பனை செய்து அதற்கு வடிவம் கொடுத்துதான் படத்தில் முதல் பத்து நிமிடங்களை காட்சிப்படுத்தினேன் , முதல் பத்து நிமிடங்கள் நான் படத்தின் இயக்குனராக இல்லாமல் கமலின் ரசிகனாக மட்டுமே இருந்தேன் என்றும் கூறியிருந்தார். (செய்தி துல்லியமாக இல்லாமலிருக்கலாம் ஆனால் அதன் மையக் கருத்து இதுதான்) .
அதற்கேற்ற வகையில் காட்சிகளையும் அமைத்திருப்பார். ப்டத்துவக்கத்திலேயே ராகவனின் கண் வேணும், கொண்டு வர்றவனுக்கு 5 லட்சம் தரேன் , ஸ்பாட் பேமன்ட் .. அடுத்த நொடி கேட்டை எட்டி உதைத்துவிட்டு கமல் கம்பீரமாக நடந்து வருகிறார்.
நீல ஜீன்ஸ் , கருப்பு சட்டை , ஆளவந்தானின் ஸ்டீராய்டுகளால் சற்றே பொத பொதவென்ற உடல் , 50 வயதுகளின் தொடக்கத்தில் கண் ரப்பைகள் லேசாக தொங்கினாலும், செதுக்கிய மீசை சற்றே தொங்க விட்ட உல்லாச பறவைகள காலத்து ஸ்டைல் என போலீசின் மிடுக்கோடு அட்டகாசமான நடை , கூடவே பின்னணி இசையைக் கேட்க வேண்டுமே ,பிளிரும் ட்ரம்பெட் பின்பு ட்ரம்பெட்டிலேயே கற்க கற்க கள்ளம் கற்க என்னும் இசை , பின்பு ராயபுரம் மணியிடம் பேசும் கமலின் மெட்ராஸ் தமிழ் வழக்கு, உச்ச கட்டமாக ஒத்தா கதவ மூடுடா என்னும் கர்ஜனை என ராகவனை இதற்குமேல் அட்டகாசமாக வெளிப்படுத்த கமலைத் தவிர யாராலும் முடியாது. அடுத்து வரும் சண்டைக் காட்சியும் வெட்டுக்களற்ற நீளமான காட்சியாக படமாக்கியிருப்பார்.
சண்டை முடிவில் இந்தப் பாடல் துவங்குகிறது, படத்தில் துவக்கத்தில் சொல்வது போல “Another Episode in Police officer’s life” . (முதல் எபிசோட் காக்க காக்க) கமலின் அன்றாட நிகழ்வுகள் காட்சித் தொகுப்புகளாக காண்பிக்கப் படுகின்றன, சின்னச் சின்ன டிவி திரை பெரிதாவது போன்று zoom in & zoom out முறையில் ஒவ்வொரு நிகழ்வும் திரையில் பெரிதாகிறது. காக்கிச் சட்டையில் கமல் சில அதிகாரிகளுடன் நடக்கிறார், டிரம்களின் அதிர்விற்கேற்ப கட் செய்யப்பட்டு இணைக்கப்பட்ட கோட் ஸ்யூட் அணிந்து கமல் நடக்கும் காட்சிகள் அற்புதம், குறிப்பாக அந்த உடையில் ரே பான் ஏவியேட்டர் கண்ணாடி அணிந்து கமல் துப்பாக்கியை நீட்டி சுடும்போது , வெற்றி விழா காலத்து , 80 களின் இறுதியில் இருந்த தோற்றத்தில் மின்னிச் செல்கிறார்.
தான் கெட்டவர்களுக்குத்தான் சிம்ம சொப்பனம், மற்றபடி எனக்கு இயல்பாக இருக்கவும் தெரியும் என்பதைக் காண்பிக்க சக போலீசாரிடம் சிரிக்கும் காட்சி , பின்பு தான் உடனடியாக நியாயத்தை வழங்குபவன் என்னும் ரீதியில் பாதிக்கப் பட்ட பெண் முன் தீயவர்களை சுட்டு வீழ்த்தும் காட்சி என இன்னும் சில பல தேய் வழக்கு காட்சிகளால் பாடல் நிறைகிறது. என்றாலும் அதனை சுவாரஸ்யமாக காண்பித்த இயக்குனரையும் ஒட்டு மொத்த பாடலையும் நம்மால் வெறுமனே புறந்தள்ள முடியாது.
இந்தப் பாடல் இன்னும் சில வகைகளில் One of its Kind ஆக விளங்குகிறது. தாமரையின் சிறப்பான பாடல் வரிகள் , தமிழ்ப்பகுதி மட்டும். தாமரை ஒரு பெண் கவிஞர் , பெண்களின் நுண்ணிய உணர்வுகளை தூது வருமா காக்க காக்க பாடலில் அழகாக எழுதியிருப்பார் , நான் இதுவரையில் கேட்டிராத வகையில் அதன் வரிகள் இருந்தன , கருப்பிலே உடைகள் அணிந்தேன், இருட்டிலே காத்துக் கிடந்தேன் , யட்சன் போல நீயும் வந்தாய் , சரசங்கள் செய்த படியே சவுக்கடி கொடுக்கும் யுவனே , வலித்தாலும் சுகம் தந்து சென்றாய் ,.. பின்னாட்களில் உயிரியல் கல்வி தொடர்பான சில அயல்நாட்டு படங்களைப் பார்த்தபோது (ஹி ஹி .. அதேதான்) சவுக்கால் அடிப்பது பற்றி அறிந்துகொண்டேன்.அடுத்த வரிகளில் Feng Shui என்னும் சீன வாஸ்து தொடர்பாக எழுதியிருப்பார். சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திட்டும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே ,.. இது ஏதோ காதல் பாடல் அல்ல , இது ஒரு மது விடுதியில் போதையில் ஆடும் பெண்ணின் பாடல். ஆனால் அப்படி ஒரு சூழலில் இதுபோன்ற பாடல்வரிகளை எழுதிய தாமரையின் மாத்தியோசி யுக்தி என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அப்படிப்பட்ட பெண்மை மிளிரும் தாமரையின் எழுத்துக்கள் ஒரு ஆணின் புஜபல பராக்கிரமத்தை எப்படிக் கூறும் ? தன் சாவைச் சட்டைப் பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான், மாவீரமும் ஒரு நேர்மையும் கை கொத்துக் கொள்ள , அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் கொள்ள , அதிகாரமோ ஆர்ப்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை முன் ஆய்வதில் பின் பாய்வதில் இவன் புலியின் பிள்ளை , பொதுவில் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்வது ஆண் பெண் காதலுக்கு உருவகமாக சொல்லப் பட்டது, ஆனால் அதையே இங்கு வீரத்திற்கு உதாரணமாக சொல்கிறார். ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே. வைரமுத்து அளவுக்கு மொழியாளுமை இல்லை என்றாலும் தாமரையின் எழுத்துக்களில் உள்ள எளிமையே அவரது சிறப்பம்சம் என்பேன்.
அப்படியே அப்பாடலில் உள்ள ராப் இசைக்கு வருவோம். தமிழில் ராப்பை சொல்லிசை என்கிறார்கள், அதாவது சொற்களால் ஆன இசை. யோகி பி யின் மடை திறந்து ( இளையராஜாவின் நிழல்கள் ) ரீமிக்ஸ் ஒரே பாடலில் அவர்களை வெளிச்சத்திற்கும் உச்சத்திற்கும் கொண்டுவந்தது. தொடர்ந்து GV பிரகாஷின் இசையில் பொல்லாதவன் ஆடுகளம் என யோகி பி கலக்கினார் .தமிழில் ராப்பின் தொடக்கம் எப்போது நிகழ்ந்தது ? பாடல்களுக்கு நடுவே வெறும் ஆங்கில வசனங்களை உச்சரிப்பது ராப் ஆகுமா ?நான் அறிந்தவரையில் முதன் முதலில் ராப்பின் ஒரு குழந்தை வடிவை பாடலில் வடித்தது இளையராஜா. அஞ்சலி படத்தில் மொட்ட மாடி மொட்ட மாடி பாடலில் குழந்தை யுவனை சில ஆங்கில வரிகள் பாட வைத்திருப்பார்.
Stop don’t move..When I say some thing you listen to that ,when I show some thing you look at that ..
now stop the game , don’t discuss it..
இதுதான் ராஜாவின் அதிகபட்ச ராப் இசை. பொதுவாக மரபான இசை மற்றும் தெம்மாங்கில் வல்லவரான ராஜா Deep Bass ஐ தரும் குறைந்த ஸ்தாயி கொண்ட கிடார் தந்திகளையோ குப் குப் என்று நெஞ்சை அதிரவைக்கும் டிரம்களையோ, Heavy Metal Rock Guitar வகைகளையோ அதிகம் பயன்படுத்துபவர் இல்லை, அது உடலுக்கு உகந்ததல்ல என்று கூறுவார் குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் , பெண்கள் , கர்ப்பிணிகள் போன்றோர் அதனால் இதய பாதிப்பிற்கு உள்ளாவர் என்று கூறுவார். ராஜாவிடமும் பாஸ் இருக்கும் , பாடல்களில் வரிகளைத தொடர்ந்து பாஸ் கூடவே வரும். இசைக் குறியீடுகள் எழுதும் போதே ராஜா Bass Follow through விற்கான குறியீடுகளையும் சேர்த்தே எழுதிவிடுவாராம். ஏனைய இசையமைப்பாளர்கள் பொதுவாக Bass follow through வை பாஸ் கிடாரிஸ்டிடமே விட்டு விடுவார்களாம். அனால் ராஜா அதனையும் தன விருப்பத்திற்கேற்றவாறு அமைப்பாராம். அப்படிப்பட்ட மரபிசை விரும்பியான ராஜாவின் ஒரு பரிசோதனை முயற்சியே அஞ்சலியில் அந்த ராப். பின்பு தமிழில் சுரேஷ் பீட்டர் குரலில் காதலனில் பேட்ட ராப் மூலம் ரஹ்மான் ராப்பை முயற்சித்திருப்பார். பின்பு காதல் தேசத்தில் பசியை மறந்தோம் பெண்ணை கண்டு பாடலில்
yo kalloori saalai hotter than a summer day bus stop,tea shop,in the middle of the non stop
cutie beauty and as sweet as candy am mad,am bad am a romeo baby
i love you lady you judge my mind
i am a never goin with the girl you are beautiful jasmine
daisy, roja, sunshine forget me not – girl I am so crazy
என்று ரஹ்மானே பாடியிருக்கிறார் (என்று நினைக்கிறேன்).
அதன் பின்னர் அவ்வளவாக ராப் என்ற ஒன்று தமிழில் வராமல் இருந்தது, யுவன் பிரேம்ஜி காலம் வரும் வரை. பின்பு ரஹ்மானும் blazee மூலம் சில ராப்களை வழங்கினார், பாய்ஸ் , பாபா , செம்மொழியான தமிழ் மொழியாம் என்று சிற்சில முயற்சிகள்.இவர்கள் பெரும்பாலும் ஆங்கில வரிகளுக்கு இந்திய பாடகர்களை யே பயன்படுத்தினர். அதனால் அசலான ராப்பின் துல்லியம் இல்லாமலாயிற்று , இந்தியர்கள் ஆங்கிலம் உச்சரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள் போன்றவை ராப்பை பாடல்களில் முக்கியத்துவம் இல்லாத பகுதியாக மாற்றின.இங்கேதான் ஹாரிஸ் மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து மாறுபட்டு , அமெரிக்க ராப் இசைக் கலைஞர்களை பாடல் வரிகளுக்கும் குரலுக்கும் பயன்படுத்தினார். அமெரிக்க கறுப்பின மக்களின் இசையான ராப் அதன் அசலான வடிவத்தில் கச்சிதமாக கற்க கற்க பாடலில் பொருந்தியது.
இந்தப் பாடலின் முழுமையான rap வரிகளைக் காண்போம்
You speed and you get pulled over And the breath analyzer test provides proof that you ain’t sober Good Cop!
Stop the beat, it could be my daughter crossing the street, If your brand new Buick Skylark, a work of art
and its not sitting in the last place you parked Good Cop!
Run the place, I’ma see the little thief right after the court gate Look, a lot of us see police’s force
I ain’t tryin to knock ur hussy, due to each his own And u get voilated and the beef is on
And u living with ur mom’s and u see they aint grown You gonna see my song, read my poem
And know that top dollar n scurry lilz cannot be that wrong
Screw you manhood tops Few good cops!”
கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன் Gotta love ur job
கள்ளம் படித்த கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன் Stand up now
சுற்றும் சுற்றும் காற்றைப்போலே எங்கும் செல்வான் இவன் aha ooh ahan
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்
Who’s the man on the land that can stand now Who’s the man on the land that can stand down
Who’s the man on the land that can stand now (Who’s the man on the land that can stand down)
Who’s the man on the land that can stand now Who’s the man on the land that can stand down
Who’s the man on the land that can stand now (Who’s the man on the land that can stand down……echo fade out)
இந்த ராப் வரிகளின் முழு அர்த்தம் எனக்கு இன்னும் புரியவில்லை. இணையத்தில் படித்த கட்டுரைகள் மூலம் ஒருவாறாக இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன் .அதாவது பொதுவில் சமூகத்திற்கு காவல் துறை மேல் ஒரு ஆழமான நம்பிக்கையின்மை அல்லது உள்ளூர ஒரு வெறுப்பு இருக்கிறது. நாமே கூட போலீசை மாமா என்று தரக்குறைவாக சமயங்களில் விளிக்கிறோம். அப்படிப்பட்ட போலீசிடமே ஒரு பிரச்சனை என்றால் சென்று முறையிடுகிறோம். இந்த முரண்பாட்டைத்தான் ராப் வரிகளில் வடித்துள்ளதாக நினைக்கிறேன்.
குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை ஓரம் கட்ட சொல்லி , அவர்கள் தெளிவாக இல்லை என்று உணர்ந்து அவர்களைத் தடுத்தால் நல்ல காவலன்.
அதிரும் இசையை ஒலிக்க விட்டு சாலையில் கவனம் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களை எச்சரிப்பவன் நல்ல காவலன்.
புத்தம் புதிய ப்யூக் கார், ஒரு கலை வடிவம் போன்ற கார் , நிறுத்திச் சென்ற இடத்தில் இல்லாமல் போனால் அப்போது போலீசிடம்தான் முறையிட வேண்டும் ,
மற்ற வரிகள் குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை.இதைப் பாடியவர்கள் தேவன் , திப்பு , நகுல் மற்று ஆண்ட்ரியா -தமிழ்ப் பகுதி
Top Dollar, Lil Curry Fizz, Akhenaton என்னும் ராப்பிசைக் கலைஞர்கள், ஆங்கிலப் பகுதி – பாடல்களும் வரிகளும்.
இந்தப் பாடலில் குறைகள் ஏதும் இல்லையா என்றால் ஒரு சில குறைகள் கண்டிப்பாக உள்ளன , முதலில் இந்த பாடலுக்கான டெம்ப்ளேட் , பாடலின் இறுதியில் காட்சியமைப்பு காக்க காக்க தூது வருமா பாடலின் இறுதிக் காட்சிகளை ஒத்துள்ளது. ஒரு ஆணின் வீரத்தை பறைசாற்றும் பாடலில் நகுலின் பெண்மை மிளிரும் குரல் ஒரு துருத்தல் போல உள்ளது.
இதன் பின்பு ஹாரிஸ் இசையமைத்த நாயகன் அறிமுகப் பாடல்கள் எதுவுமே அத்தனை பிரபலம் இல்லை, பீமாவில் ஒரு முகமோ இரு முகமோ , சத்யம் படத்தில் விஷாலுக்கு ஆறடி காத்தே என்னும் ஒரு பாடல் , சூர்யாவிற்கு ஆதவன்,அயன் என்று இசையமைத்திருந்தாலும் கற்க கற்க பாடலை இனி அவராலேயே கூட மிஞ்ச முடியாது என்பது என் எண்ணம். அப்படி அவர் மிஞ்சாமல் இருப்பதே இந்த பாடலுக்கு அவர் செய்யும் மரியாதை என்று எண்ணுகிறேன்.
இந்த பாடல் குறித்து அறிந்து கொள்ள இணையத்தில் சில உரையாடல்கள் , சிறிய பதிவுகளின் பின்னூட்டப் பெட்டிகளில் இருந்து நிறைய தகவல்கள் என சிறிது சிறிதாக தகவல் சேர்த்தேன். அவர்களுக்கு நன்றிகள் பல .
Advertisements
loved reading this article !! I have been kamals die hard fan all these years but never got into depth of this song and never knew what the rap lyrics meant, until I read this!! great work !! 🙂 and your research on other rap bits in Tamil songs were awesome !!! 🙂
Thanks Mohan for the kind words. Am happy you liked it.
Boss I am die hard fan like you. You analyzation for single song magnifies it as a whole movie. Excellent.
Thanks Pradeep.. Glad you liked it
Very good analyse…! Keep up the good work.. I impressed on your review..!
Thanks Ganesh, Hope I will post more stuff which is of interest to you